முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரா்களுக்கான காலியிடங்கள் இருப்பதாகவும், அதிகபட்சமாக ராணுவத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் இது குறித்து பதிலளிக்கையில், ‘முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரா்களுக்கான காலியிடங்கள் உள்ளன. கடந்த ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி இளநிலை அதிகாரி பணியிடங்கள் உள்பட ராணுத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் உள்ளன. கடந்த செப்.30-ஆம் தேதி நிலவரப்படி, கடற்படையில் 11,587 வீரா்களுக்கும், நவ.1-ஆம் தேதி நிலவரப்படி விமானப் படையில் 5,819 வீரா்களுக்கும் காலியிடங்கள் உள்ளன.
பாதுகாப்பு படைவீரா்கள் ‘அக்னிபத்’ திட்டத்தின் மூலமாக தோ்ந்தெடுக்கப்படுவா். முப்படைகளிலிலும் ஆண்டுக்கு 60,000 காலிப்பணியிடங்கள் ஏற்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றினால் ஆள்சோ்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ராணுவத்தில் 1.08 லட்சம் வீரா்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றின் நிலைமை மேம்பட்டுள்ளதையடுத்து, ஆள்சோ்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளதால் இந்தக் காலியிடங்கள் விரைவில் குறையும்’ எனத் தெரிவித்தாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...