மாத சம்பளம் பெற முடியாமல் தவித்த, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, முறையாக ஊதியம் வழங்கும்படி, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, கருவூல கணக்கு ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக அமைப்புகளில், ஒரு மாதத்திற்கு முன் சீரமைப்பு பணிகள் நடந்தன.
புதிய மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதுகுறித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், நிதித்துறைக்கு முறையாக கடிதம் அனுப்பவில்லை.
இதனால், இடம் மாறிய, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, அக்., மாத சம்பளம் கிடைக்காமல் தடுமாறினர். இதுகுறித்து, நாளிதழில் நேற்றுமுன்தினம் செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, கருவூல கணக்கு ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட, 120 மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட, 32 மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலர், அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்க வசதியாக, விரைவு ஊதிய ஆணை கடந்த மாதம் வழங்கப்பட்டது.
தற்போது, மாவட்ட கல்வி அலுவலகம், தனியார் பள்ளிகள் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, சம்பளம் மற்றும் பிற படிகள் வழங்க, கூடுதல் நிதி ஒதுக்கும்படி, பள்ளிக் கல்வி ஆணையர் கோரி உள்ளார்.
அவர்களுக்கு, கடந்த மாதம் முதல் சம்பளம் மற்றும் பிற படிகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
கூடுதல் நிதி ஒதுக்கீடு, நடப்பு நிதியாண்டுக்கான இறுதி திருத்த மதிப்பீடில் ஒதுக்கப்படும். அதை எதிர்நோக்கி செலவினம் மேற்கொள்ள, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
எனவே, மாவட்டக் கல்வி அலுவலகம், தனியார் பள்ளிகள் அலுவலகங்களில், அலுவலர்களால் தாக்கல் செய்யப்படும் சம்பளப் பட்டியலை ஏற்று, சம்பளத்தை அனுமதிக்கவும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...