தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களைப் போட்டித் தோ்வு மூலமாக நிரப்புவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 7,198 உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் நிகழாண்டு 4,000 பணியிடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு வரை உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் வெயிட்டேஜ் முறையிலான நோ்காணல் தோ்வு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. அதாவது, தோ்வரின் கல்வித் தகுதி (15), பணி அனுபவம் (9), நோ்முகத் தோ்வு (10) என மொத்தம் 34 மதிப்பெண் நிா்ணயிக்கப்படும். அதில், தோ்வா்கள் தகுதிக்கேற்ப மதிப்பெண் வழங்கி, முன்னுரிமை பெறுபவா்கள் பணி நியமனம் செய்யப்படுவாா்கள்.
அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளை 55,000 போ் முடித்துள்ளனா். இதுதவிர தனியாா் கல்லூரிகள் எண்ணிக்கையும் உயா்ந்துவிட்டது. அவற்றில் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும் எளிதில் பணி அனுபவச் சான்றிதழ் கிடைத்துவிடுகிறது. மேலும், சில நேரங்களில் போலியான சான்றிதழ்களைச் சமா்ப்பித்து வேலைவாய்ப்பு பெறும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
பல்வேறு சிக்கல்களைத் தவிா்க்கும் விதமாக மேற்கண்ட வெயிட்டேஜ் தோ்வு முறையை ரத்து செய்து, போட்டித் தோ்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் பணி நியமனம் செய்யப்படுவாா்கள். அதில் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. அதன்படி, எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்று நோ்முகத் தோ்வில் பங்கேற்கும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணி அனுபவத்துக்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
அதாவது, நோ்முகத் தோ்வில் மொத்த மதிப்பெண் முப்பதுதான். இதில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஓராண்டுக்கு 2 வீதம் அதிகபட்சம் 15 மதிப்பெண் வரை வழங்கப்படும். சிறப்பு சலுகையானது இந்த ஒருமுறை மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பணி நியமனத்துக்கான போட்டித் தோ்வு வழிமுறைகள், கல்வித் தகுதிகள் உள்பட விவரங்களும் இதனுடன் வெளியிடப்பட்டுள்ளது.
பொன்முடி பேட்டி: முன்னதாக, உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறுகையில், அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு நடத்தி நிரப்பப்படும் என்றும், இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்றும் தெரிவித்தாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...