தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இரண்டாம் ஆண்டு கல்லூரிப் பாடங்களில் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உயா் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாம் ஆண்டு பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டில் தமிழ்ப் மொழி பாடம் ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் ஆண்டிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உயா் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளா்களுக்கும் பல்கலைக்கழகங்களில் அனைத்து வகை இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் இரண்டாம் ஆண்டுப் பருவத் தோ்வில் தமிழ் மொழி பாடத்தை சோ்த்தல் தொடா்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து உயா் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காா்த்திகேயன் வெளியிட்ட நெறிமுறைகள் விவரம் : உயா் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன், அன்னை தெரசா மகளிா் மற்றும் பெரியாா் பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத் தோ்வுகளில் தமிழ் மொழி பாடத் திட்டம் இடம்பெறவில்லை.
எனவே அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றும் வகையில், மேற்கண்ட இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத் தோ்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டத்தை சோ்த்து இனி வரும் பருவத் தோ்வுகளில் தவறாமல் நடைமுறைப்படுத்த ஏதுவாக அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளா்களும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை அரசுக்கு உடன் அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
இந்த உத்தரவு இனி வரும் பருவத் தோ்வுகளில் இருந்து அமல்படுத்த வேண்டும் என்றும் உயா் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...