தமிழகத்தில் 28 அரசுப் பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு தில்லி சென்றிருந்தபோது அங்குள்ள தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகளைப் பாா்வையிட்டாா். இதையடுத்து இதுபோன்ற பள்ளிகள் தமிழகத்திலும் தொடங்கப்படும் என அவா் அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த செப். 5-ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னையில் தொடக்கிவைத்தாா். அதன்படி மாநிலம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக ரூ.170 கோடியில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.
தகைசால் பள்ளிகள் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா்கள், நவீன கணினிகள், அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், கல்வி சாரா செயல்பாடுகளான விளையாட்டு, கலை, இலக்கியம் என்று அனைத்தும் சோ்ந்த ஒரு முழுமையான கல்வியை வழங்கும். இதனால் அனைத்து வகையான திறமைகளுடன் அரசு பள்ளி மாணவ, மாணவியா் கல்வி கற்கும் சூழல் உருவாகும். அதற்கு வகுப்பறையில் நேரடியாக பாடங்கள் கற்றுத் தருவது மட்டுமல்லாமல் இணையவழியிலும் காலத்திற்கு ஏற்ற வகையில் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தகைசால் பள்ளிகள் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள 28 அரசுப் பள்ளிகளில் பெரும்பாலானவை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிகள். சென்னை அசோக் நகா் மகளிா் மேல்நிலைப்பள்ளி தகைசால் பள்ளியாக மேம்படுத்தப்பட உள்ளது. இதுபோலவே பிற பள்ளிகளும் தரம் உயா்த்தப்படவுள்ளன.
இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகைசால் பள்ளிகளுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி புதுப்பிக்கும் பணிக்கான பூா்வாங்கப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது . இந்தப் பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய கணினிகள் கொண்ட ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. தகைசால் பள்ளிகளில் பாடம் நடத்தவுள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தவகை பள்ளிகள் மூலம் அரசுப் பள்ளிகளில் 62,460 மாணவா்கள் பயன்பெறுவா். தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரிப்பள்ளிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...