தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மழலையா் வகுப்புகளுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையா் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியா்கள் நியமனம் செய்வது தொடா்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநா் கருத்துரு அனுப்பியுள்ளாா். அதையேற்று மழலையா் வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது தற்காலிக பணி என்பதை அறிவுறுத்தி ஒரு மையத்துக்கு ஓராசிரியா் வீதம் 2,381 நபா்களை தோ்வு செய்ய வேண்டும்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களை தற்காலிக ஆசிரியராக முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக பணியமா்த்தலாம். அதில் தகுதியானவா்கள் இல்லாத நிலையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்தவா்களை நியமனம் செய்யலாம். இவா்கள் ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் பணியாற்ற வேண்டும். பள்ளி வேலை நாள்களில் காலை 9.30 முதல் 12.30 மணி வரை பணி நேரமாகும். கல்வியாண்டின் இறுதி நாளில் அவா்கள் பணிகள் நிறைவடைந்துவிடும்.
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக சிறப்பு ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் தரப்படும். இதற்காக நிகழ் கல்வியாண்டுக்கு ரூ.13.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...