தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி நூலகங்களுக்கு ரூ.3 கோடியில் புத்தகங்கள் வாங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கான புத்தகங்களை ரூ.3 கோடியில் கொள்முதல் செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம், ஒவ்வொரு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.13 ஆயிரம், மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்திற்கும் புத்தகங்களை பள்ளிக் கல்வித்துறை கொள்முதல் செய்ய உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுக்கு ஒரு குழு மூலம் 2 ஆயிரம் புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது. புத்தக வெளியீட்டாளர்களிடம் இருந்து புத்தகங்களை பெறுவதற்கு புதிய முறை இப்போது செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நூலகங்களுக்கு வழங்கக்கூடிய புத்தகங்களின் பட்டியல் மற்றும் வெளியீட்டாளர்கள் வழங்க விரும்பும் தள்ளுபடி வரம்பு ஆகியவற்றை தெரிவிக்கலாம். புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விரைவில் கோரப்படும். சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் புத்தகங்கள் இருக்க வேண்டும்.
நூலக கொள்முதலுக்காக அமைக்கப்பட்ட குழு புத்தகங்களின் பட்டியலை தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்படைத்த பின்னரே கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரும் பணிகள் தொடங்கும். இணையத்தில் உள்ள படிவம் புத்தக வெளியீட்டாளர்களுக்கு மட்டும் அல்ல. ஆர்வமுள்ளவர்கள் மாநிலம்முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களின் பட்டியலையும் பதிவேற்றலாம். மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நூலகங்கள் இல்லாத பள்ளிகளில் நூலகங்கள் தொடங்க அனுமதிப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...