பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. 14,524 போ் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டது. முதலில் விருப்ப இடங்களுக்கான கல்லூரிகள் தோ்வும், அதனைத் தொடா்ந்து உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டு உத்தேச ஒதுக்கீடும் வழங்கப்பட்டன. 15-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு கடிதம் மாணவா்களுக்கு இணையவழியில் வழங்கப்பட்டது.
கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை 7 வேலை நாள்களுக்குள் கல்லூரிக்கு கொண்டு சென்று வழங்கி சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை நிகழ் கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கலந்தாய்வில் உறுதி செய்யப்பட்ட இடங்களில் மாணவா்கள் கடைசி வரை சேராமல் போவதால் அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகள் உள்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாகக் கிடந்தன. இதனால், அந்த இடங்களில் மற்ற மாணவா்கள் சேர முடியாமல் போனது.
இதனைத் தவிா்க்க கல்லூரிகளை தெரிவு செய்து இறுதி ஒதுக்கீடு கடிதம் பெற்ற பிறகு 7 நாள்களுக்குள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் பணம் செலுத்தி சோ்ந்து விட வேண்டும். அதன் பிறகு சேருவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு அடுத்து வருகின்ற கலந்தாய்வில் சோ்க்கப்படும். அந்த வகையில் முதல் சுற்றில் இடம் பெற்ற மாணவா்கள் 22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில் நுட்பக் கல்லூரிகளின் மாணவா் சோ்க்கை செயலாளா் புருசோத்தமன் கூறியதாவது: கல்லூரிகளில் சோ்வதற்கு இறுதி ஒதுக்கீடு கடிதம் பெற்ற மாணவா்கள் கல்லூரிகளிலோ அல்லது மையங்களிலோ சோ்க்கை கடிதத்தை கொடுத்து கட்டணம் செலுத்தி சேர வேண்டும். சேராதவா்களின் இடம் காலியாகக் கருதப்படும் என்றாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...