சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் சீனா திரும்புவதற்கு விசா வழங்கப்பட்டது. இருப்பினும் விமான சேவையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நேரடி விமானங்கள் இல்லை. இதனால், சீனா திரும்ப முடியாமல் மாணவர்கள் தவித்தனர். இதுதொடர்பாக இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே, சீன மருத்துவ கல்லூரிகளில் மீண்டும் இந்தியா மற்றும் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் ஒரு விரிவான ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* சீனாவில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள எப்எம்ஜிஇ (வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். கடந்த 2015 முதல் 2021 வரை இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்சிஐ) எப்எம்ஜிஇ தேர்வில் பங்கேற்ற 40,417 மாணவர்களில் 6,387 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, சீனாவில் மருத்துவம் படித்ததில் 16 சதவீதம் பேர் மட்டுமே எப்எம்ஜி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதை மாணவர்களும், பெற்றோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* சீன அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டு மருத்துவ படிப்பு மற்றும் ஓராண்டு இன்டர்ன்ஷிப் வழங்கும் 45 பல்கலைக்கழகங்களில் மட்டுமே சேர வேண்டும். பிற கல்லூரிகளில் சேரக் கூடாது. எனவே மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன்பாக, அந்த கல்லூரி சீன அரசின் அங்கீகாரம் பெற்றதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
* சீனாவில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்த நாட்டிலேயே பயிற்சி பெற உரிமம் பெற வேண்டும். எனவே, இன்டர்ன்ஷிப் முடித்த பிறகு, மாணவர்கள் சீன மருத்துவ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சீனாவில் பயிற்சி செய்ய மருத்துவர் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
* சீன மொழி கற்பது கட்டாயம்
இந்திய மாணவர்கள், சீன மொழியில் வழங்கப்படும் மருத்துவ கல்வி திட்டத்தில் சேர அனுமதி கிடையாது. எனவே, இருமொழி முறையில் (ஆங்கிலம் மற்றும் சீன மொழி) பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் மட்டுமே சேர வேண்டும். அதே சமயம், மருத்துவ அமர்வுகளுக்கு சீன மொழியான புடோங்குவாவை கற்றுக்கொள்வது அங்கு கட்டாயமாகும்.
* நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்
சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், இந்தியாவில் இளங்கலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட்-யுஜி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே எப்எம்ஜிஇ தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...