இதில், 1.50 லட்சம் இடங்களுக்கு, 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் கவுன்சிலிங்கை, தமிழக உயர் கல்வித் துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 1.59 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 443 கல்லுாரிகளில், 1.50 லட்சம் இடங்கள், கவுன்சிலிங் வழியே நிரப்பப்பட உள்ளன.விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு, கடந்த மாதம் 20 முதல் 23ம் தேதி வரை கவுன்சிலிங் நடந்தது. மற்ற மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங், கடந்த 25ம் தேதி துவங்க இருந்தது. 'நீட்' தேர்வு முடிவு தாமதத்தால், கவுன்சிலிங் தேதி இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது.
நவ., 20 வரை
நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, நாளை இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் துவங்க உள்ளது. இந்த கவுன்சிலிங் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டு நவ., 13ல் முடிகிறது. நவ., 15 முதல் 20 வரை துணை கவுன்சிலிங் நடக்கிறது. கவுன்சிலிங்கின் முதல் சுற்று நாளை துவங்குகிறது. இரண்டாம் சுற்று, இம்மாதம் 25; மூன்றாம் சுற்று, அக்., 13; நான்காம் சுற்று அக்., 29ல் துவங்குகிறது.
ஒவ்வொரு சுற்றிலும் தர வரிசைப்படி மாணவர்கள் பங்கேற்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இடங்களை தேர்வு செய்வதற்கான, 'சாய்ஸ் பில்லிங்' முறையில், கல்லுாரிகளின் பதிவுக்கு இரண்டு நாட்கள்; தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்ய இரண்டு நாட்கள்; கல்லுாரிகளில் சேர ஒரு வாரம் என, ஒவ்வொரு சுற்றுக்கும் 11 நாட்களுக்கு மேல் ஒதுக்கப்படுகின்றன.
7.5 சதவீதம்
மாணவர்கள் குழப்பமின்றி பங்கேற்கும் வகையில், ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து, உயர் கல்வித் துறை சார்பில் வழிகாட்டுதல் 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணைப்புகள், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின், www.tneaonline.orgஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கவுன்சிலிங்கும் நான்கு சுற்றுகளாக, பொது கவுன்சிலிங் நாட்களிலேயே நடக்கிறது.அரசு பள்ளி ஒதுக்கீடுக்கு தகுதி பெற்ற மாணவர்கள், பொது கவுன்சிலிங் மற்றும் அரசு பள்ளி ஒதுக்கீடு என, இரண்டு இடங்களை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். ஒதுக்கப்படுவதில் எந்த இடம் மாணவருக்குப் பிடித்துள்ளதோ, அதில் சேரலாம் என கவுன்சிலிங் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...