நொண்டி குதிரை
காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன. எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் எல்லாம் அதனை சோம்பேறி என்று கேலி செய்தன.
நண்பர்கள் எல்லாம் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று நொண்டிக் குதிரைக்கு சற்று வருத்தமாகயிருந்தது. நண்பர்கள் எல்லாம் அறியாமையின் காரணமாக இப்படிக் கேலி செய்கின்றனர். அதனால் நாம் அவர்களின் மீது கோபப்படுவது நல்லதல்ல... என்று முடிவு செய்தது அந்த நொண்டிக் குதிரை. ஒருநாள் சிங்கம் ஒன்று அந்தப் புல்தரையில் பக்கமாக வந்தது. அந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் புற்களை மேய்ந்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது.
புல்தரையின் ஓர் ஓரத்தில் படுத்திருந்த நொண்டிக் குதிரை, சிங்கத்தை கவனித்து விட்டது. இந்தச் சிங்கம் நம்மையும், நம் நண்பர்களையும் கவனித்து விட்டது. நிச்சயமாக இதனால் நமக்கு ஆபத்து நேரிடும். உடனடியாக இதனைப்பற்றி நம் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று நினைத்தது அந்தக் குதிரை.
நண்பர்களே, சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கராஜா மறைந்திருந்து நம்மையெல்லாம் கவனித்துச் சென்றுவிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரால் நமக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக இந்த புல்வெளியினை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட வேண்டும், என்றது.
நொண்டிக் குதிரையின் பேச்சைக்கேட்ட மற்ற குதிரைகள் எல்லாம் சிரித்தன. நொண்டிக் குதிரையின் வார்த்தைகளை மற்ற குதிரைகள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. சிங்க ராஜாவின் பிடியில் இருந்து எப்படியாவது நண்பர்களை காப்பாற்ற வேண்டும். எப்படி காப்பாற்றுவது என்று யோசித்தது. திடீரென அதன் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அதன்படி அந்தக் குதிரையானது சிங்கத்தைத் தேடிச் சென்றது. தன் எதிரே தைரியத்துடன் ஒரு குதிரை நொண்டியபடி வருவதை, வியப்போடு பார்த்தது சிங்கம்.
சிங்க ராஜாவே, வணக்கம். என் வருகை உங்களுக்கு வியப்பினை ஏற்படுத்தலாம். இருந்தாலும் உங்களுக்கு சந்தோஷமான செய்தி சொல்லவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள், என்று பணிவோடு கூறியது குதிரை. சிங்க ராஜா! குதிரையைப் பார்த்து, என்னை எதற்காக சந்திக்க வந்திருக்கிறாய் என்று கேட்டது? அதற்கு நொண்டிக் குதிரை, சிங்க ராஜாவே, ஒருநாள் நானும் என் நண்பர்களும் புல்தரையில் நின்றபோது மறைந்திருந்து நீங்கள் எங்களை கவனித்து விட்டீர்கள். தங்கள் மூலம் என் நண்பர்களுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அதனைத் தடுக்க வேண்டி ஓடோடி வந்தேன்.
சிங்க ராஜாவே! நான் என் நண்பர்களை, என் உயிரை விட மேலாக மதித்து வருகிறேன். ஆகையால் என் நண்பர்களை காப்பாற்ற நானே என் உயிரைக் கொடுத்து உங்களுக்கு விருந்தாக வந்துள்ளேன். நீங்கள் என்னைச் சாப்பிடுங்கள். என் நண்பர்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டது நொண்டிக் குதிரை. தன் நண்பர்களுக்காக இந்த அளவுக்கு கெஞ்சும் நொண்டிக் குதிரையைக் கண்டு சிங்கத்தின் மனம் மேலும் இளகியது. உன்னுடைய உயர்ந்த குணத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று கூறி குதிரையை தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டது சிங்கம்.
நொண்டிக் குதிரை சிங்கத்தோடு வருவதைக் கண்டதும் எல்லாக் குதிரைகளும் திடுக்கிட்டன. உடனே சிங்கம், நீங்கள் யாரும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். நான் உங்களின் நண்பனான நொண்டிக் குதிரையை நீங்கள் இவ்வளவு நாட்களாக உங்களில் ஒருவனாக எண்ணாமல் அதன் மனத்தை புண்படுத்தி வந்தீர்கள்.
ஆனால், உங்கள் நண்பனான இவனோ, என்னால் உங்களுக்கு வரப்போகின்ற ஆபத்தைத் தடுத்து, உங்களுக்காக எனக்கு விருந்தாக உணவளிக்க வந்தது. இவ்வளவு நல்ல குணங்களைக் கொண்ட இந்த குதிரையின் மனதை இவ்வளவு நாட்களாகப் புண்படுத்தி வந்துள்ளீர்கள். இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் என்றது சிங்கம். சிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் எல்லா குதிரைகளும் தலை குனிந்தன. அன்போடு அந்த நொண்டிக் குதிரையினை சூழ்ந்து கொண்டன. அதனைக் கண்டு சிங்கமும் மகிழ்ச்சியடைந்தது.
நண்பா, உனக்கு கால்தான் ஊனம். ஆனால், எங்களுக்கோ மனமே ஊனமாகி விட்டது. உன் நல்ல குணத்தைப் புரிந்து கொண்டோம். குதிரைகள் அனைத்தும் நொண்டி குதிரையிடம் எங்களை மன்னித்து விடு என்று மன்னிப்பு கேட்டன. குதிரைகள் அனைத்தும் நொண்டிக் குதிரையை புரிந்து கொண்டதைப் பார்த்து சிங்கம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...