தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஆகஸ்ட் 29 - அணு ஆயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள்
ஆகஸ்ட் 9, 1945 உலகுக்கு மறக்க முடியாத தினம். ஜப்பானின் நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசிய தினம். ஆகஸ்ட் 6-இல் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசி இலட்சக்கணக்கானோரைக் கொன்று குவித்த அமெரிக்கா, அந்தச் செயலுக்குத் துளியும் குற்றவுணர்ச்சி இல்லாமல் அடுத்த மூன்றாவது நாளில் நாகசாகியை அழித்தது.
மனிதகுலம் கண்டிராத அந்த அழிவுக்குப் பின்னர், 23 ஆண்டு காலம் கழித்து, 1968 ஜூலை 1இ-ல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் கையெழுத்துக்காக முன்வைக்கப்பட்டது.
1970 மார்ச் 6-இல் இது அமுலுக்கு வந்தது. ஆனால் அணு ஆயுதங்கள் விஷயத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் செயல்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேற விடாமல் செய்கின்றன என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்!
இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த போது ஆச்சரியப்படத்தக்க வகையில் 191 நாடுகள் இதில் கையெழுத்திட்டிருந்தன.
*அணுஆயுத ஒழிப்பில் மும்முரமாக இருந்த, இருக்கின்ற இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.*
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா தவிர இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் தற்போது அணுஆயுதம் வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
2003-இல் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம்.
*இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள் வருமாறு:*
அணு ஆயுதப் பரவலைத் தடைசெய்வது, அமைதி நோக்கங்களுக்கான அணு ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு வழங்குவது, முற்றிலுமாக அணுஆயுதங்களை ஒழிப்பது.
1970இ-ல் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகுதான் வட கொரியா, இஸ்ரேல், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அணுஆயுத நாடுகளாயின.
இவற்றில் தென்னாபிரிக்கா நிறவெறி அரசு நீக்கப்பட்டதும் அணுஆயுதங்களைக் கைகழுவி விட்டது.
இஸ்ரேலிடம் அணுஆயுதங்கள் இருப்பது உலகத்துக்கே தெரிந்தாலும் அதிகாரபூர்வமாக அந்நாடு இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை.
*அமைதிக்கான அணு ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு என்பது நடைமுறையில் எப்படி இருக்கிறது?* மேற்கத்திய நாடுகள் வளரும் நாடுகளுக்கு அணு உலைகளை விற்கத் தங்களது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகின்றன.
அந்த அளவில்தான் ஒப்பந்தத்தின் இரண்டாவது நோக்கம் இருக்கிறது.
கடைசியாக - முழுமையான அணு ஆயுத ஒழிப்பு. இது எந்த அளவில் சாத்தியம் என்று பார்ப்போம்.
அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள்தான் இதனை முதலில் ஒழிக்க வேண்டும். ஆனால், அந்நாடுகள் அதற்குத் தயாராக இல்லை.
சொல்லப் போனால், இந்த ஐந்து நாடுகள்தான் பிற நாடுகளுக்குப் பெரிய அளவில் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்கின்றன.
ஆயுத ஏற்றுமதிக்காக உலகையே பதற்றத்தில் வைத்திருக்கும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஆயுத விற்பனை செய்வதால், பல நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுக்கு இணையாக ஆயுதங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் வேறு.
பாதுகாப்பு விஷயத்தில் அதிக நிதியை ஒதுக்குவதால், வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாமல் அந்நாடுகள் திணறுகின்றன.
*சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு சுருக்கமாக ஐகேன் (International Campaign to Abolish Nuclear Weapons* (சுருக்கமாக ICAN, என உச்சரிக்கப்படுகிறது) என்பது உலகளாவிய அமைப்பாகும்.
இது அணு ஆயுதங்கள்மீதான தடை ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிக்கவும், முழுமையான செயல்படுத்தவும் செயல்பட்டு வருகிறது.
*ஐகேன் அமைப்பு 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.* இவ்வமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது. நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களின் கூட்டணியான இவ்வமைப்பு, 2017 ஆண்டுவாக்கில் 101 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
அணுஆயுத ஒழிப்புக்காக போராடி வரும் இந்த அமைப்புக்கு 2017 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. "அணு ஆயுதங்கள் மீதான, `ஒப்பந்த தடையை உருவாக்க சிறப்பான களப்பணி ஆற்றியமைக்காக இந்த விருது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
*அமெரிக்காவின் நிலைப்பாடு எத்தகையது?*
தென்கொரியாவில் அமெரிக்கா அளித்துவரும் இராணுவரீதியான ஒத்துழைப்பால், அச்சமடைந்த வடகொரியா, ஏவுகணைகளையும் அணு ஆயுதத்தையும் உற்பத்தி செய்தது. சமீப காலமாக அணுஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் மூலம் தென் கொரியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் நேரடியாக மிரட்டல் விடுத்தது வட கொரியா.
ஆனால், வட கொரியா மீது அமெரிக்காவால் இராணுவ நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மாறாக, வட கொரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. காரணம் தென் கொரியா மீதும் ஜப்பான் மீதும் அணு ஆயுதங்களை வீசப் போவதாக வட கொரியா மிரட்டினாலே அமெரிக்கா பணிந்து விடும். பாகிஸ்தான் விஷயத்திலும் இதே நிலைதான்.
வளர்ந்த நாடுகளின் அச்சுறுத்தலின் காரணமாக, அணு ஆயுதங்களைத் தங்கள் தற்காப்புக்காக உருவாக்கும் நிலைக்குச் சில நாடுகள் தள்ளப்பட்டன என்பதை மறுக்க முடியாது.
இந்தச் சூழலில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகின்றன!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...