ஒரு பல்கலைக்கழகம் ஒருவருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்றால் அதற்கு பல்வேறு சட்டத்திட்டங்கள் கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லாமல் தற்போது பணம் உள்ள யார் வேண்டுமானாலும் டாக்டர் பட்டம் வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் முதுகலை பட்டம் பெற்ற நபர்களுக்கு பி.எச்.டி எனப்படும் டாக்டர் பட்டத்தை அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு வழங்குகின்றனர். ஆனால், 5ம் வகுப்பு கூட படிக்காமல் சில பேர் போலி பல்கலைக்கழகங்கள் மூலம் டாக்டர் பட்டங்களை பெற்று தங்களை சமூகத்தில் முனைவர் என்றும் டாக்டர் என்றும் பெயருக்கு முன்னால் குறிப்பிட்டு கொள்கின்றனர். குறிப்பாக வெளி நாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் போலியாக வெப்சைட்டுகளை உருவாக்கி அதில் குறிப்பிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் பெயர் லோகோ மற்றும் பல்கலைக்கழகத்தின் வரலாறு போன்றவற்றை பதிவு செய்கின்றனர். அதன்பின்பு ஆண்டுதோறும் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாகவும், அதற்கு சமூகத்தில் உயரிய மதிப்புள்ள அல்லது சமூக அக்கறை உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து டாக்டர் பட்டங்களை வழங்குகிறோம், என விளம்பரம் செய்கின்றனர். அதனை நம்பி பலரும் விண்ணப்பிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்ட இந்த டாக்டர் பட்டத்தின் மதிப்பு தற்போது 15 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சரிந்துள்ளது. அதற்கு காரணம் போலி பல்கலைக்கழகங்களின் வருகை அதிகரித்துள்ளது, என பலரும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பெறப்படும் டாக்டர் பட்டங்கள் எதற்கு பயன்படுகின்றன என்று பார்த்தால், பெயருக்கு முன்னால் தங்களை படித்தவர் என காண்பித்துக் கொள்ளவும், சமூகத்தில் உயரிய பொறுப்பில் உள்ளார்கள் என்ன காண்பித்துக் கொள்ளவும் மட்டுமே பயன்படுகிறது.
இவ்வாறு போலி பல்கலைக்கழகங்கள் பெயரில் டாக்டர் பட்டங்களை தரும் மோசடி பேர்வழிகள் 30 பேர் அல்லது 50 பேர் கொண்ட குழுக்களை உருவாக்குகின்றனர். அவர்களுக்கு டாக்டர் பட்டங்கள் வழங்குகிறோம் என்று கூறி ஆளுக்கு ஏற்றார் போல் தொகையை நிர்ணயம் செய்து பணம் வசூல் செய்கின்றனர். அதன் பின்பு பாண்டிச்சேரி அல்லது மாமல்லபுரம் போன்ற இடங்களில் ஸ்டார் ஓட்டல்களில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். டாக்டர் பட்டமளிப்பு விழா என பிரமாண்ட அறிவிப்புகளை வெளியிட்டு இதற்கு அரசியல் சார்ந்த நபர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரையும் விருந்தினர்களாக வரவழைத்து அவர்களது கையால் டாக்டர் பட்டங்களை அளிக்கின்றனர். இப்படி டாக்டர் பட்டங்களை அளிக்கும் பல்கலைக்கழகங்கள் எங்கு செயல்படுகின்றன, என்று பார்த்தால் பெயர், முகவரி மட்டுமே வெப்சைட்டில் இருக்கும். ஆனால் உண்மையில் அவ்வாறு பல்கலைக்கழகங்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளன. வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் பெயரை பயன்படுத்தியும், வெளிமாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்தியும் போலியாக வெப்சைட்டுகளை தயார் செய்து, டாக்டர் பட்டங்களை பலர் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல அனைவரும் அவரவர் வேலையை பார்த்து சென்று விடுகின்றனர். ஆனால், இப்படி டாக்டர் பட்டங்களை தரும் நபர்கள் கொள்ளை லாபம் பார்த்து சமூகத்தில் டாக்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்றனர். கஷ்டப்பட்டு படித்து பல வைவாக்களில் பதில் அளிக்க முடியாமல் டாக்டர் பட்டம் கைநழுவி டாக்டர் பட்டம் பெற முடியாமல் தவிக்கும் முதுகலை பட்டதாரிகள் மத்தியில் வெறும் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கி அதனை தங்களது பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் மோசடி பேர்வழிகளை யார் அடையாளம் காணுவது. மோசடி பல்கலைக்கழகங்கள் பெயரில் டாக்டர் பட்டம் கொடுக்கும் நபர்களை யார் அடையாளம் காண்பது என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே போலி பல்கலைக்கழகங்கள் மூலமாக தகுதியில்லாத நபர்களுக்கு டாக்டர் பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...