வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, வேலைவாய்ப்பு பிரிவு
இணையதளத்தின் வாயிலாக 2011 ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர்கள்
பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது
என்பது அறிந்ததே.
இந்நிலையில்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயலாளர் - 3 அவர்களால் 6.6.2022 அன்று
நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டபடி நிகழ்நிலையாக
வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும்
நடைமுறை கைவிடப்படுகிறது எனத் திடீரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண்
சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும்
மனுதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவட்டை வழங்கப்பட வேண்டும். மேலும்,
வேலைவாய்ப்பு இணைய தளமான www.tnvelaivaaippu.gov.in
ல் நிகழ்நிலையாக அனைவரும் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் அதில்
நேரடியாக மாணவர்கள் பதிவுகள் செய்து கொள்ளலாம் என்பதையும் வேலைவாய்ப்பு
பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை "இ சேவை" வாயிலாக
செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்பதால் அவ்வசதியினையும் விருப்பம்
உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை கிண்டியில் உள்ள
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் சார்பில் கணினி/6086/2022
நாள்: 05.07.2022 அன்று ஒரு குறிப்பாணை வெளிவந்துள்ளது.
இக்குறிப்பாணையினால்
நடுத்தர, ஏழை, எளிய, அடித்தட்டு மாணவர்களின் பள்ளி அளவில் மிக எளிதாக
நடைபெறும் வேலைவாய்ப்புப் பதிவு முறை இனி வருங்காலங்களில் மீண்டும் பழையபடி
மிகுந்த சிக்கலுக்கு வழிவகுக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. பதிவு
மூப்பு நாள் இனி ஆளாளுக்கு வேறுபடும். மேலும், அரசு குறிப்பிட்டிருக்கும்
மேற்காணும் இடங்களில் தேவையற்ற கூட்ட நெரிசலும் வீண் கால மற்றும்
பணவிரயமும் மிகுதியாக ஏற்படும் அவலநிலை தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும்.
மேலும், இதனால் தேவையற்ற குளறுபடிகளும் முறைகேடுகளும் நிகழ்வதுடன்
நல்லாட்சிக்கு வீணான அவப்பெயர் ஏற்பட்டு, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்
மத்தியில் பொல்லாத வெறுப்பை அறுவடை செய்ய நேரிடும் என்பது கவலை தரத்தக்க
செய்தியாகும்.
குறிப்பாக,
கிராமப்புற, நகர்ப்புறங்களில் வாழும் படிக்காத, பாமர பெற்றோர்களும்
அவர்களின் 10, +2 படிப்பை நிறைவு செய்த வெளியுலகம் அறியாத பிள்ளைகளும்
இதனால் பெரும் அவதியுறுவர். ஒற்றைப் பெற்றோர் மற்றும் பெண் பிள்ளைகள் நிலை
இன்னும் மோசம். திக்குத் தெரியாத இ-சேவை மையங்களையும், மாவட்ட தலைநகரில்
மட்டுமே இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகங்களையும், வேலைவாய்ப்புப் பதிவு
மேற்கொள்ளும் இணையதள வசதி கொண்ட தனியார் மையங்களையும் நோக்கி, காலநேரம்
பார்க்க முடியாமலும் அன்றைய நாள் கிடைத்த கூலி வேலைக்குப் போக முடியாமல்
முழுக்குப் போட்டும் வயிற்றில் ஈரத்துணியுடன் படையெடுக்கும் போக்குகள்
மலியும். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையின்
ஆகச் சிறந்த செயல்பாடாக விளங்கி வந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நலன்
சார்ந்த பள்ளியளவிலான, ஒரே பதிவு மூப்பு நாள் அடிப்படையிலான வேலைவாய்ப்புப்
பதிவினைத் தக்க காரணமின்றி நீக்கி பலருக்கும் பல்வேறு சிரமங்களை
ஏற்படுத்தவிருக்கும் தனியார் இணையதள மையங்கள் கொள்ளை இலாபம் ஈட்ட
வழிவகுக்கும் பெற்றோர் மற்றும் மாணவர் விரோத குறிப்பாணையை ரத்து செய்வது
அவசர அவசியம் மிக்க ஒன்றாகும்.
எல்லோருக்குமான
விடியல் ஆட்சியில் பெற்றோர் மற்றும் மாணவர் நலன்கள் என்றென்றும் காக்கப்பட
வேண்டும் என்பது கல்வியாளர்களின் ஏகோபித்த கருத்தாகும். பள்ளியளவில்
மேற்கொள்ளப்படும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புப் பதிவு நடைமுறை தொடர்ந்து
நடைபெறச் செய்வதே நல்லது; சிறந்ததும்கூட.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...