ஒரு வார காலத்திற்குள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்ற அமைச்சரின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் நேற்று அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர், கடிதம் மற்றும் போராட்டம், பேச்சுவார்த்தை நடத்தியபிறகும், ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 13ம் தேதி (திங்கள்) முதல் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் அறிவித்துள்ளார். எனவே, அனைத்து மண்டலங்களிலும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் 13ம் தேதி முதல் வேலைநிறுத்தம் முடிவடையும் நாள் வரை சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறும், பொது விநியோக திட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படா வண்ணம், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.தினேஷ்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அகவிலைப்படி வழங்க கோரி நமது சங்கத்தின் சார்பில் அரசுக்கும், கூட்டுறவு துறைக்கும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.இதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. தற்போது கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்’ என்று உத்திரவாதம் அளித்துள்ளார். அவரது அறிக்கையை ஏற்றும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் வேண்டுகோளின்படியும், பணியாளர் நலன் கருதியும் வருகிற 13ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...