தமிழக அரசு துறைகளின் பல்வேறு பதவிகளுக்கான, 'குரூப் 1, 2' தேர்வின் முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், சார் - பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட, 67 வகை பதவிகளில், 5,529 காலியிடங்களை நிரப்ப, 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை தேர்வு, இந்த ஆண்டு மே 21ல் நடந்தது.தேர்வில் 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:இந்த மாதம் வெளியிடப்படுவதாக இருந்த, குரூப் - 2 தேர்வு முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும். துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப் - 1 பதவியில், 66 காலியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட பிரதான தேர்வின் முடிவுகள், அடுத்த மாதம் வெளியிடப்படும்.மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - -2 பதவியில், 110 காலியிடங்களை நிரப்ப, 2018ல் நடத்தப்பட்ட தேர்வின் நேர்முக தேர்வு முடிவுகள், நீதிமன்ற வழக்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் உதவி வழக்கறிஞர் பணியில், 50 காலியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்ட பிரதான தேர்வின் முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும்.தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை - -1 பதவியில், 25 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்வு நடந்தது.இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் 29ம் தேதி முதல், ஜூலை 7 வரை சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...