தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடந்து வருகின்றன. ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளையுடன் தேர்வுகள் முடிகின்றன. பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி தேர்வுகள் முடிகின்றன.
கவுன்சிலிங் முறைகேடு
பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, ஜூன் 23ல் வெளியிட, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்துவதற்கான ஏற்பாடுகளில், உயர் கல்வி துறை ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டில் நடந்த குளறுபடிகள் ஏற்படாமல், கவுன்சிலிங்கை முறையாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு மற்றும் கவுன்சிலிங் முறையில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, உயர் கல்வி அமைச்சர் பொன்முடிக்கு புகார்கள் வந்து உள்ளன. எனவே, கவுன்சிலிங்கை நேரடி முறையில் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வரும் 17ம் தேதி, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியினர், உயர் கல்வி அதிகாரிகள், கல்லுாரி முதல்வர்கள், தாளாளர்கள் ஆகியோரை அழைத்து, உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில், கவுன்சிலிங்கை எப்படி நடத்தலாம் என கருத்துகள் கேட்கப்பட்டு, முடிவு செய்யப்பட உள்ளது.
பள்ளிகளில் பதிவு
இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் ஆன்லைன் கவுன்சிலிங்கிலும், தனியார் 'பிரவுசிங்' மையங்களில் நடந்த பதிவு முறையிலும், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் உள்ளன. இதை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு, 100 இடங்களில், ஆன்லைன் பதிவுக்கான உதவி மையங்களை உயர் கல்வி துறை அமைக்க உள்ளது.மேலும், அனைத்து அரசு பள்ளிகளிலும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளில், மாணவர்கள் எந்த சேவை கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு பின் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு, ஜூலை 17ல் நடக்கிறது. எனவே, ஜூலை 18 முதல் ஒரு மாதத்துக்கு, ஆன்லைன் பதிவு மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்பட உள்ளதாக, உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
எனவே, பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கும், அதேபோல், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கும் விண்ணப்பிக்கலாம். மேலும், கவுன்சிலிங் ஆன்லைன் வழியில் நடக்குமா, நேரடியாக நடக்குமா என்பதை, வரும் 17ம் தேதிக்கு பின் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என, உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...