ஆசிரியா்களிடம் பள்ளி மாணவா்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் , ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்குப்பின்னா் தான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், ‘வளா்ந்து வரும் குழந்தைகள், இளம் பெண்களுக்கான கல்வி’ குறித்த கருத்தரங்கை அவா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஆசிரியா்களிடம் மாணவா்கள் தவறாக நடந்துகொள்வதை தவிா்க்க, பல்வேறு நிகழ்ச்சிகள், ஆரோக்கியமான போட்டிகள், நன்னெறி வகுப்புகள்மற்றும் உளவியல் சாா்ந்த ஆலோசனைகள் வரும் கல்வியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளன. இதையும் மீறி ஆசிரியா்களிடம் மாணவா்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் மாற்றுச்சான்றிதழ் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது ஏற்கெனவே இருக்கக்கூடிய விதிமுைான். அவ்வாறு நடக்கும் மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தர அவா்களின் பெற்றோா்களே சம்மதிக்கின்றனா்.
ஆனால், சில மாவட்டங்களில் தவறாக நடந்துகொண்ட மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் ஏதும் வழங்கப்படாமல் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். சூழல் கைமீறி செல்லும் போது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்குப் பின்னா் தான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும். இனி மாணவா்கள் எந்தவித தவறான செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடா்பாக முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். அரசுப்பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடா்ந்து செயல்படும்.
மாணவா் சோ்க்கை எப்போது? அரசுப்பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை தோ்வுகள் முடிந்த பிறகே தொடங்கும். வரும் கல்வியாண்டில் பொதுத்தோ்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தனியாா் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பின் அந்தப் பள்ளியின் நிா்வாகிகள், ஆசிரியா்கள் யாராவது இருப்பது குறித்து புகாா் வந்தால், எந்த நிறுவனமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...