Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது, செயல்படுத்த வேண்டும்! பா.ம.க. நிறுவனர் அறிக்கை

IMG_20220508_133148
 தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், அதை செயல்படுத்துவது சாத்தியமல்ல என்று நிதியமைச்சர் பழனிவேல்  தியாகராஜன் கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது விளக்கமளித்த அத்துறையின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்,‘‘தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது’’என்று தெரிவித்தார். அத்துடன் இந்த விஷயத்தில் முதலமைச்சரும், அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதனால், அமைச்சர் கூறியது அவரது சொந்தக் கருத்தா... தமிழக அரசின் கருத்தா? என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த முடியாது என்பதற்காக அமைச்சர் முன்வைத்துள்ள காரணங்கள் இரண்டு தான். முதலாவது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் சார்பிலும், பணியாளர் சார்பிலும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்ட நிதியை பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட வேறு நிதியங்களுக்கு மாற்றுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன, இரண்டாவது, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மீண்டும் மாற வேண்டும் என்றால் தமிழக அரசுக்கு அதிக செலவு ஆகும் என்பது தான். ஆனால், இந்த இரு காரணங்களும் ஏற்க முடியாதவை.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்ட நிதியை பொது வருங்கால வைப்பு நிதிக்கு மாற்றுவதில் சட்ட சிக்கல் இருப்பது உண்மை தான். அண்மையில் கூட, இந்த நிதி மாற்றம் குறித்து இராஜஸ்தான் அரசு விடுத்த வேண்டுகோளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிராகரித்து விட்டது. ஆனால், தமிழக அரசு நினைத்தால் மத்திய அரசிடம் பேசி இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று அமைச்சர் கூறுவது கடமை தவறல் ஆகும்.

இரண்டாவதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால் அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். இன்னும் கேட்டால், நிதிச்சுமை காரணமாகத் தான் 2003&ஆம் ஆண்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்போதைய ஜெயலலிதா அரசு ரத்து செய்து விட்டு, புதிய  ஓய்வூதியத்தை அறிமுகம் செய்தது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தால், நிதிச்சுமை அதிகரிக்கும் என்ற உண்மையை நன்றாக அறிந்து தான் 2006, 2011, 2016 ஆகிய   தேர்தல்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாக்குறுதியை திமுக அளித்தது. 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையின் 84 ஆவது பக்கத்தில் 309-ஆவது வாக்குறுதியாக   பழைய ஓய்வூதியத் திட்டம் இடம் பெற்றுள்ளது. இவ்வாறாக நிதிச்சுமை அதிகரிக்கும் என்பதை நன்றாக அறிந்தே அளிக்கப்பட்ட வாக்குறுதியை, அதே காரணத்திற்காக நிறைவேற்ற மறுப்பது நகைமுரண் ஆகும்.

இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப் படவில்லை; இன்னும் பழைய ஓய்வூதியத் திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. இந்திய நீதித்துறையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதியக்குழு  பரிந்துரைத்துள்ளது. இதற்கு காரணம், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியர்களுக்கு சமூகப்பாதுகாப்பு கிடைக்காது என்பது தான். இராணுவத்திலும், நீதித்துறையிலும் நிராகரிக்கப்பட்ட ஓர் ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் மீது மட்டும் தொடர்ந்து திணிப்பது அரசு ஊழியர் நலனுக்கு எவ்வகையிலும் வலு சேர்க்காது.

இராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்து விட்டது. சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நோக்கி பல மாநில அரசுகள் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மட்டும் அதற்கு நேர் எதிரான திசையில் பயணிப்பது நியாயமல்ல. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது தான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆகும். இல்லாத காரணங்களையெல்லாம் கூறி அதை நிராகரிக்காமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive