டில்லியில், 15 நாட்களில், கொரோனா தொற்று பரவல், 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. இதையடுத்து, 'முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கையை மக்கள் கைவிடக் கூடாது' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில், 2019 டிசம்பரில் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, 2020 ஜனவரியில் நம் நாட்டிலும் பரவத் துவங்கியது. இரண்டரை ஆண்டுகளாக உலகையே முடக்கிப் போட்டுள்ள இந்த கொடூர வைரஸ் பரவலால், உலக பொருளாதாரம் சரிவை சந்தித்தது. இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா பரவல் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தடுப்பூசி
இரண்டு, மூன்று என அடுத்தடுத்த அலைகளுக்கு பின், தொற்று பரவல் குறையத் துவங்கியது. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போட்டுள்ளதை அடுத்து, தொற்று பாதிப்பின் தீவிரம் மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளன. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில், மத்திய - மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்தன. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என்ற உத்தரவை மாநில அரசுகள் கைவிட்டன. சுய விருப்பத்தின் அடிப்படையில் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக முக கவசம் அணிவதை பெரும் சுமையாக கருதி வந்த மக்கள், கட்டுப்பாட்டு தளர்வுகளால் மகிழ்ச்சி அடைந்தனர்.இதனால், பொது இடங்களில் முக கவசம் அணிவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்து வந்தாலும், நாட்டில் பல்வேறு பகுதிகளில் மெல்ல அதிகரிக்கும் போக்கை காண முடிகிறது. குறிப்பாக தலைநகர் டில்லியில் நேற்று முன்தினம், 461 பேருக்கு புதிதாக தொற்றுஉறுதியானது; இருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், டில்லியின் தொற்று பரவல் நிலையை கண்டறிய, 'லோக்கல் சர்க்கிள்ஸ்' என்ற ஆய்வு நிறுவனம் கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தியது. 67 சதவீத ஆண்கள், 33 சதவீத பெண்கள் என டில்லியை சுற்றி வசிக்கும் 11 ஆயிரத்து 743 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.இதில் பங்கேற்றவர்களிடம், 'உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அருகில் வசிப்போர், உடன் பணி புரிவோர் என மிக நெருக்கமான வட்டத்தில், கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
'ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை' என, 70 சதவீதம் பேர் தெரிவித்தனர். 'ஒன்று அல்லது இரண்டு பேர்' என, 11 சதவீதத்தினர் தெரிவித்தனர். மூன்று முதல் ஐந்து பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, 8 சதவீதம் பேர் தெரிவித்தனர். 11 சதவீதத்தினர் எந்த பதிலும் கூறவில்லை. இதன் வாயிலாக, டில்லியில் வசிக்கும் 19 சதவீத மக்களுக்கு நெருக்கமான ஒருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.
அலட்சியம்:
இதே கேள்வியை கடந்த 2ம் தேதி கேட்டபோது, தங்களுக்கு நெருங்கிய வட்டத்தில் பாதிப்பு உள்ளதாக 3 சதவீத மக்கள் மட்டுமே தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த, 15 நாட்களில் டில்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம் தெரிவித்து உள்ளது. 'தொற்று தடுப்பு நடவடிக்கையில் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் அலட்சிய உணர்வே இந்த திடீர் உயர்வுக்கு காரணம்' என, நிபுணர்கள் கருதுகின்றனர்.
'முக கவசம் கட்டாயமில்லை என்றாலும், பொது இடங்களில் முக கவசம் அணிவதை கைவிட வேண்டாம். தனிமனித இடைவெளி, கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது எப்போதுமே அவசியம்' என, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...