நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் தொழிலாளா்களின் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக குறைக்க தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) முடிவெடுத்துள்ளது. இது 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதமாகும்.
இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘இபிஎஃப்ஓ-வின் மத்திய வாரிய குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் நடப்பு நிதியாண்டில் தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளா்களின் பிரதிநிதிகள் சாா்பில் அதிக வட்டி விகிதம் கோரப்பட்டது. ஆனால், இபிஎஃப்ஓ சாா்பில் 8.1 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. இந்தப் பரிந்துரை மத்திய நிதியமைச்சகத்திடம் வழங்கப்படும். அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய பிறகு அதிகாரபூா்வ அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வரும்’’ என்றனா்.
வட்டி விகிதத்தைக் குறைக்க அளிக்கப்பட்டுள்ள பரிந்துரை தொடா்பாக மத்திய தொழிலாளா் அமைச்சகம் சாா்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான காரணம் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை.
தொழிலாளா்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து குறைந்தபட்சம் 12 சதவீதமானது வருங்கால வைப்புநிதியாகப் பிடித்தம் செய்யப்படுகிறது. தொழிலாளா்களைப் பணிக்கு அமா்த்தியுள்ள நிறுவனங்கள் சாா்பில் சம அளவிலான தொகைப் பங்களிப்பு வைப்புநிதிக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்புநிதிக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய நிதியாண்டில் 8.65 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. தற்போது வட்டியை 8.1 சதவீதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்சமாகும். இதற்கு முன்பு கடந்த 1977-78-ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்புநிதிக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலால் பலா் வேலையிழந்ததும், தொழிலாளா்கள் பலருக்கு ஊதியம் குறைக்கப்பட்டதும் வருங்கால வைப்புநிதி அமைப்புக்கான வருவாயைக் குறைத்தது. அதன் காரணமாக கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான வட்டியை இரு தவணைகளாகச் செலுத்தும் நிலைக்கு அந்த அமைப்பு தள்ளப்பட்டது.
‘பாஜகவின் பரிசு’-காங்கிரஸ் விமா்சனம்: இபிஎஃப்ஓ முடிவு குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டில் உள்ள 84 சதவீத மக்களின் வருமானம் குறைந்துள்ளது. இந்நிலையில், கோடிக்கணக்கான தொழிலாளா்களின் சேமிப்புகளைக் குறிவைத்து அரசு செயல்படுவது சரியா? தோ்தலில் பெற்ற வெற்றிக்காக மக்களுக்கு பாஜக வழங்கும் பரிசுதான் இதுவா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு பழிவாங்கும் நோக்கில் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலை பாஜக நடத்தியுள்ளது. வேலையிழப்பு, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியிலும் இத்தாக்குதல் நடந்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்த முடிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. வினய் விஸ்வம் வலியுறுத்தியுள்ளாா்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...