தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனும் உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் டிஎம்., எம்.சிஎச். போன்ற உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் "நீட்" தகுதி பெற்ற அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், எஞ்சியுள்ள 50 சதவீதம் இடங்கள் மத்திய அரசுக்கு அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு கடந்த 2020, நவம்பர் 7-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிரான மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு பிறப்பித்த அரசாணைக்கு அனுமதி அளித்து கடந்த ஜனவரியில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இது தொடர்பாக கேரள அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை 2020-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டத் தடை ஏதும் இல்லாவிட்டால், 2021-22-இல் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேற்படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கலாம் என உத்தரவிட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மருத்துவர்கள் என்.கார்த்திகேயன், ரிஷப் பார்கவா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. வாதங்களுக்குப் பிறகு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், அந்த அமர்வே புதன்கிழமை இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அதில், கூறப்பட்டுள்ளதாவது: 2020, நவம்பர் 27-ஆம் தேதியிட்ட இடைக்கால உத்தரவின் மூலம் 2020-2021 கல்வியாண்டுக்கு வழங்கப்பட்ட இடைக்கால பாதுகாப்பைத் தொடர்வதற்கான எந்த வழக்கும் இதில் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கருதுகிறோம். ஆகவே, இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். இதன் மூலம், தமிழக அரசு வழங்கும் இடஒதுக்கீட்டைக் கருத்தில் கொண்டு, கல்வியாண்டிற்கான கவுன்சிலிங்கை தமிழக அரசு தொடரலாம். இந்த விவகாரத்தில் கடந்த 2020-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணை குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தது. மேலும், அந்த உத்தரவு 2020-21 கல்வியாண்டுக்கு மட்டுமே செயல்படுத்தத்தக்கது எனவும் தெரிவித்திருந்தது.
2021-22 கல்வியாண்டைப் பொறுத்தமட்டில், அரசின் அரசாணையானது சொல்லப்பட்டுள்ள கல்வியாண்டுக்கான சேர்க்கை நடைமுறை தொடங்குவதற்கு முன்பு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்க வழக்கில் அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவில், அரசுப் பணி மருத்துவ விண்ணப்பதாரர்களைப் பொருத்தமட்டில் முதுநிலைப் பட்டம், டிப்ளமோ மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக ஒரு தனி சானல் - நுழைவு ஆதாரம் அல்லது இடஒதுக்கீடு அளிக்க அரசு அதிகாரம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்கள்மீதான விசாரணை ஹோலி விடுமுறைக்குப் பிறகு பட்டியலிடப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த மேல்முறையீட்டு வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் துஷ்யந்த் தவே, ஷியாம் திவான், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் முன்வைத்த வாதத்தில், "டாக்டர் பிரீத்தி ஸ்ரீவாஸ்தவா வழக்கில் இது போன்று எந்த இடஒதுக்கீடும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது' என்றனர்.
தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் வாதிட்டனர். சி.எஸ். வைத்தியநாதன் முன்வைத்த வாதத்தில், "தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம், வழக்கில் இது சம்பந்தமாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரமானது இடஒதுக்கீடு அல்லாமல் ஒருவித சேர்க்கைக்கான ஆதாரமாகும் என கூறப்பட்டுள்ளது. இதை அரசமைப்புச்சட்ட சாசன அமர்வும் அனுமதித்துள்ளது' என்றார்.
தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வாதிடுகையில், "இந்த வழக்கு புதிதல்ல. ஏற்கெனவே, தமிழக அரசுக்கு எதிராக கே.துரைசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று இடங்கள் ஒதுக்கீடு அளிக்கப்படும் போதுதான் கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...