வரும் 2022 - 23ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மகளிருக்கு மாதம் 1,௦௦௦ ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை, நாளை சமர்ப்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசில், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட தியாகராஜன், முதல் முறையாக ௨௦௨௧ ஆக., 13ம் தேதி, 2021 - 22ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
முன்னுரிமை
முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டாக, அது தாக்கல் செய்யப்பட்டது. ஆக., 14ல், முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2022 - 23ம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த பட்ஜெட்டில், 'தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை படிப்படியாக செயல்படுத்துவோம்' என உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், குடும்பத் தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் என்பது முக்கியமானது.
சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 'மாதம் 1,000 ரூபாய் உள்ளிட்ட வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை' என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. எனவே, இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், குடும்பத் தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
கடந்த 2021 - 22ம் ஆண்டு திருத்த பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை 58 ஆயிரத்து 693 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், 2022 - 23ம் ஆண்டில், வருவாய் பற்றாக்குறை 36 ஆயிரத்து 376 கோடி ரூபாயாக குறையும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, வருவாய் பற்றாக்குறை எவ்வளவு குறைந்துள்ளது என்பது இன்று தெரிய வரும்.நிதி அமைச்சர் தியாகராஜன், 'கடந்த 10 மாத உழைப்பின் பலனை, இன்றைய பட்ஜெட்டில் காணலாம்' என நம்பிக்கை அளித்திருக்கிறார். இது, பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
வாய்ப்பு
ஒவ்வொரு துறையிலும், புதிய வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அது எவ்வளவு துாரம் கைகொடுத்துள்ளது என்ற விபரமும் இன்று தெரிய வரும்.இந்த அரசு பொறுப்பேற்றபோது, கடும் நிதி நெருக்கடி நிலவியது. இதை சமாளிக்க, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்; எடுக்க உள்ள நடவடிக்கைகள்; அரசின் மொத்த கடன்; கடனுக்கு செலுத்தும் வட்டி போன்ற விபரங்களும், இன்றைய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிக்காக பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்திருக்கிறது. அதனால், இன்றைய பட்ஜெட்டில், நகர்ப்புற வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட் தாக்கலுடன் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். அதன்பின், சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடக்கும். இதில், நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வது பற்றியும், எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும்.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், வரும் 24ம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
பழைய சட்டசபையில் கூட்டம்
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கொரோனா ஊரடங்கு காரணமாக சட்டசபை கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலும் அங்கு தான் நடந்தது. இம்முறை தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரிய சட்டசபையில், இன்று பட்ஜெட்
தாக்கல் செய்யப்படுகிறது. காகிதமில்லா பட்ஜெட் என்பதால், எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைகளில் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...