கால்நடை மருத்துவ இளநிலைப் படிப்புளுக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை (பிப்.2) வெளியிடப்பட்டது. அதில் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளாா்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 480 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
திருவள்ளூா் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கிறது. இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
இதேபோன்று, ஓசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2021 - 22-ம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 8-ஆம் தேதி நிறைவடைந்தது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச், பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 26,898 போ் விண்ணப்பித்திருந்தனா். பரிசீலனைக்குப்பின் 26,459 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் படிப்புகளுக்கான நேரடி மற்றும் இணையவழி கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் இணையதளங்களில் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கோவை மாணவி முதலிடம்:
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த பூா்வா ஸ்ரீ (கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு - 199.710) முதலிடம் பிடித்துள்ளாா். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் தீரஜ் (கட்-ஆப் மதிப்பெண் - 199.710) இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த நிஷாந்த் (கட்-ஆப் மதிப்பெண் - 198.285) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.
அதேபோன்று பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஜெனிபா் (கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு - 197.215) முதலிடம் பிடித்துள்ளாா். தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி கனிஷ்கா (கட்-ஆப் மதிப்பெண் - 196.985) இரண்டாம் இடத்தையும், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி குணபிரியா (கட்-ஆப் மதிப்பெண் - 196.815) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...