பொதுமக்கள், ஏழை, எளியோர் இணையதளம் மூலம் எளிதாக ஆற்று மணல் பெற புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள், ஏழை-எளியோர், புதிதாக வீடுகட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் கட்டிடமற்ற இதர பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து, வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் வகையிலும், பொதுமக்கள், ஏழை-எளியோர் பயன் பெறும் வகையிலும் புதிய வழிமுறைகளை கடைப்பிடித்து மணல் விற்பனை செய்யுமாறு ஆணையிட்டுள்ளார்.
ஏழை- எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும்.
தற்போது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்பட உள்ள வங்கிகளின் கவுண்ட்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வசதியை, தற்போது நடைமுறையில் உள்ள இணையதள வங்கி கணக்கு(நெட் பேங்கிங்), ஏ.டி.எம். அட்டை(டெபிட் கார்டு) மற்றும் யூ.பி.ஐ. ஆகிய ஆன்-லைன் சேவைகள் வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...