பள்ளிக் கல்வித் துறையின்கீழ் அரசுப் பள்ளிகளில பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி அனுபவம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அவ்வபோது பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அடுத்தபடியாக மாவட்ட கல்வி அதிகாரிகளாக (டிஇஓ) பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அண்மையில் பல்வேறு மாவட்டங்களில் 15 பேருக்கு டி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட 15 பேரை மீண்டும் தலைமை ஆசிரியர்களாக திடீரென பதவி இறக்கம் செய்ய பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது அவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக, டி.இ.ஓ.,க்கள் 20 பேர் நேரடி பணி நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். அத்துடன் இவர்களுக்கான துறைரீதியான பயிற்சியும் விரைவில் நிறைவு பெற உள்ளது.
இதன் காரணமாக அவர்களுக்கு டிஇஓ பணியிடத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது மாநிலம் முழுவதும் மொத்தமே ஐந்து டிஇஓ பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
இதனால் மீதமுள்ள 15 பேருக்கு அவர்களுக்கான பணியிடங்களை ஒதுக்க முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பதவி உயர்வு பெற்று பணியாற்றும் 15 டிஇஓக்களை மீண்டும் தலைமை ஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்துவிட்டு, அவர்களின் இடத்துக்கு பயிற்சி முடித்தோரை நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் டிஇஓக்களாக பதவி உயர்வு பெற்ற 15 தலைமை ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...