அதிக உயிர்பலி வாங்கும் 'நியோகோவ்' வைரஸ் சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கையால் மீண்டும் பீதி
உருமாறிய 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்று அச்சுறுத்தலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தென் ஆப்பிரிக்காவில் மிக தீவிரம் வாய்ந்த 'நியோகோவ்' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை சீன ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் 2019 டிசம்பரில் கொரோனா தொற்று பரவல் முதன்முதலாக கண்டறியப்பட்டது. மற்ற நாடுகளுக்கும் மெல்ல பரவத்துவங்கிய அந்த வைரஸ் 2020ல் உலகம் முழுதும் பரவி மனிதகுலத்தையே முடக்கியது.
பல்வேறு முறை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு 'ஆல்பா, பீட்டா, டெல்டா' என பெயர்கள் சூட்டப்பட்டன. ஒவ்வொரு முறையும் வைரஸ் உருமாற்றம் அடையும்போது அதன் தீவிரத்தன்மை கூடியது. 'டெல்டா' வகை தொற்று பரவலின் போது உலகம் முழுதும் அதிக உயிர்பலி ஏற்பட்டது.சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமைக்ரான்' வகை தொற்றுக்கு மிக வேகமாக பரவும் தன்மை இருந்தாலும் தீவிரம் இல்லாத காரணத்தினால் உயிர் பலி அதிகரிக்கவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவத்துவங்கிய சீனாவின் வூஹான் நகரை சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 'நியோகோவ்' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.இது தற்போது பரவி வரும் கொரோனா வைரசின் உருமாறிய வகை அல்ல என்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 2012 மற்றும் 2015ல் பரவி மிகப் பெரிய அளவில்நுரையீரல் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகளை விட இது அதிக வீரியம் மிக்கது என்றும் தொற்று பாதிப்புக்கு ஆளாகும் மூவரில் ஒருவர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சாதாரண சளி, காய்ச்சலில் தொடங்கி மிக கடுமையான நுரையீரல் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள்கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் வவ்வால்களிடம் இந்த 'நியோகோவ்' வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் 'இன்னும் ஒருமுறை உருமாற்றம் அடைந்துவிட்டால் இது மனிதர்களை தாக்கும் வீரியம் உடையதாக மாறிவிடும்' என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.'தற்போதைய கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பூசிகளால் நம் உடலில் உருவாகி உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை 'நியோகோவ்' வைரஸ் எளிதில் வீழ்த்தி விடும்' என கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு'நியோகோவ் வைரசின் வீரியம் குறித்து அடுத்த கட்ட ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...