பள்ளி மாணவ -- மாணவியரின் கலை திறன்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய கலாசார பிரிவு சார்பில், தேசிய அளவில் கலை திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தங்க பதக்கத்துடன் 25 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கத்துடன் 20 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக வெண்கல பதக்கத்துடன் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் பங்கேற்றனர். வாய்ப்பாட்டு, இசை, நடனம் என மொத்தம் ஒன்பது நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தேசிய அளவிலான போட்டி 'ஆன்லைன்' வழியில் நடத்தப்பட்டது.தமிழகத்தில் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றவர்கள், இந்த மாதம் 3ம் தேதி சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்த, ஆன்லைன் வழி போட்டியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், கலா உத்சவ் போட்டிக்கான பரிசுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்பது வகை போட்டிகளில், 27 பேர் பரிசு பெற்றுள்ளனர். அவர்களில் ஏழு பேர் தமிழக பள்ளி மாணவர்கள்.தஞ்சை மாரியம்மன் கோவில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, 10ம் வகுப்பு மாணவர் சரண், உள்நாட்டு பொம்மை மற்றும் விளையாட்டு பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.அதே போட்டியில் மாணவியர் பிரிவின் மூன்றாம் பரிசை, ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி, பிளஸ் 1 மாணவி சரண்யா பெற்றுள்ளார்.
சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவி மாதவி, நாட்டுப்புற கலாசார இசை கருவி வாசித்தலில் மூன்றாம் பரிசு பெற்று உள்ளார்.திருச்சி பிஷப் ஹீபர் அரசு உதவி பெறும் பள்ளி பிளஸ் 1 மாணவர் தாரணீஷ், நாட்டுப்புற நடனத்தில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.மற்ற பரிசுகளை, மயிலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி, காஞ்சிபுரம் மகரிஷி சர்வதேச பள்ளி, சென்னை செங்குன்றம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி மாணவ - மாணவியர் பெற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...