கல்வித்துறையில் தேவைப்படும் மாற்றங்கள்!
உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 5 வகுப்புகள் உள்ளன. ஒரு வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்கள் உள்ளன. ஆக மொத்தம் 25 பாடங்கள். ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு நான்கு பாடங்கள் வீதம் ஒதுக்கப்பட்டால் 20 பாடங்களை ஒதுக்கலாம். தலைமையாசிரியருக்கு ஒரு பாடத்தை ஒதுக்கினால் மீதமுள்ள 4 பாடங்களுக்கு மேலும் ஒரு ஆசிரியர் கண்டிப்பாக வேண்டும்.
மேலும், ஒரு வகுப்பிற்கு தமிழ்-7, ஆங்கிலம்-7, கணக்கு-7, அறிவியல்-7, சமூக அறிவியல்-5, விளையாட்டு-2, வாழ்க்கைச் சார்ந்த கல்வி-2, கலைக்கல்வி-2, கணினிக் கல்வி-1 என 40 பாடவேளைகள் (ஒரு வாரத்திற்கு ஐந்து வேலை நாட்கள் வீதம்) என உள்ளது.
விளையாட்டு-2, வாழ்க்கைச் சார்ந்த கல்வி-2, கலைக்கல்வி-2 என 5 வகுப்புகளுக்கு ஆகியவற்றிக்கு கண்டிப்பாக ஒரு ஆசிரியர் உயர்நிலைப் பள்ளிக்கு அவசியம் தேவை.
பாடவேளைகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டால் நலமாக இருக்கும். தமிழ்-7, ஆங்கிலம்-7, கணக்கு-7, அறிவியல்-7, சமூக அறிவியல்-7, விளையாட்டு-2, வாழ்க்கைச் சார்ந்த கல்வி (நீதிபோதனை)-1, கலைக்கல்வி-1, கணினிக் கல்வி-1 என 40 பாடவேளைகள்.
உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஏழு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். அவை தமிழ் ஆசிரியர்-1, ஆங்கில ஆசிரியர்-1, கணக்கு ஆசிரியர்-1, அறிவியல் ஆசிரியர்-2, சமூக அறிவியல் ஆசிரியர்-1, கணினி ஆசிரியர்-1 என அமையலாம்.
வாழ்க்கைச் சார்ந்த கல்வி (நீதிபோதனை)-1, கலைக்கல்வி-1, கணினிக் கல்வி-1 என 5 வகுப்புகளுக்கு 15 பாடவேளைகள் மற்றும் ICT கணினியறை, IFHRMS தளத்தில் பட்டியல் தயார் செய்தல், EMIS சார்ந்த அனைத்து பணிகள், Online தேர்வுகள், Scholarship சார்ந்த பணிகள், Online பயிற்சிகள், போட்டித் தேர்வுகள், Inspire award,. . . ஆகிய பணிகளையும் சேர்த்து ஒரு கணினி ஆசிரியருக்கு பணிகளாக ஒதுக்கீடு செய்யலாம்.
கல்விசாராப் பணிகளுக்காக ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் பணியிடங்கள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
சாரண சாரணியர், செஞ்சுருள் குழு, பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், நுகர்வோர் பாதுகாப்பு மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில இலக்கிய மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், சமூக அறிவியல் மன்றம், . . . ஆகியவை கண்டிப்பாக உரிய ஆசிரியர் பொறுப்பில் நடத்தப்பட வேண்டும். இத்தகைய நிகழ்வுகள், ஆசிரியர், மாணவர், பெற்றோர்களிடையே ஒரு நல்லுறவையும், நற்பண்புகளையும், ஒழுக்கத்தையும், . . . உருவாக்க வல்லன.
தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் அனைத்தையும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திவிடலாம். ஒவ்வொரு நடுநிலைப் பள்ளியிலும் மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர், அப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றியமைத்து உருவாக்கப்படும் போது ஒரு பட்டதாரி ஆசிரியர் (ஒன்பதாம் வகுப்பு), ஒரு தமிழாசிரியர், ஒரு தலைமையாசிரியர் பணியிடம் வழங்கப்பட்டால் போதுமானது. அதற்கு அடுத்த வருடம் (பத்தாம் வகுப்பு) ஒரு பட்டதாரி ஆசிரியர், ஒரு கணினி ஆசிரியர் என பணியிடங்கள் ஒதுக்கீடு செய்தால் போதுமானது.
இவ்வாறு 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப்பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப்பள்ளிகள், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை மட்டும் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என மூன்று வகைப் பள்ளிகளாக மாற்றியமைக்கப்பட்டால் பள்ளிக்கல்வி சிறந்தோங்கி செயல்படும்.
ஒவ்வொரு ஒன்றிய அளவில் கல்வித்துறை அலுவலகம் ஒன்று இருந்தால் போதுமானது. அதன் பொறுப்பாளராக ஒரு வட்டாரக் கல்வி அலுவலர் இருக்க வேண்டும். அவர் மேல்நிலைக் கல்வித் தலைமையாசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். அவரின் கீழ் செயல்படும் இரு வட்டாரக் கல்வி அலுவலர்கள் (பட்டப் படிப்பு, ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடித்த மற்றும் துறைத் தேர்வுகள் எழுதிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டவராகவும், துறைத் தேர்வுகள் எழுதிய உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டவராகவும் இருக்க வேண்டும். மூன்று பதவிகளுக்கும் 50% நேரடிப் போட்டித்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலங்கள் கலைக்கப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஏற்கெனவே உள்ள இரண்டு நேர்முக உதவியாளர் பணியிடங்கள் (உயர்நிலை, மேல்நிலை), மூன்று மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும். அவை முறையே தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி பொறுப்பில் இருந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் பதவி உயர்வுப் பணியிடங்களாக இருக்க வேண்டும். இப்போதுள்ளது போலவே, இம்மூன்று பதவிகளுக்கும் 50% நேரடிப் போட்டித்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வழக்கம்போல் மூன்று மாவட்டக் கல்வி அலுவலர்களும் பணி மூப்பு அடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளையும் (வனத்துறைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை, கள்ளர் பள்ளிகள், . . .) ஒரே கல்வித்துறையின் கீழ் செயல்படுமாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
எல்லாப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்ப்டும் இனவாரியான கல்விச் சலுகைகள் தங்குதடையின்றி கிடைப்பதால் தனித்தனி துறையின் கீழ் இயங்க வேண்டிய அவசியம் எழாது.
கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். "கணிப்பொறி அறிவு பெறாத ஆசிரியர் அரை ஆசிரியர்" என்பது இன்றைய நடைமுறை உண்மையாகும்.
நம்மை
விட இன்றைய மாணவன் அதிக திறமைசாலி என்பதையும், அவனுக்குத் தக்கவாறு தகுதியுடையவராக
மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டியது
காலத்தின் கட்டாயம். இதை அரசும் புரிந்துகொள்ள வேண்டிய தருணமும் இதுவே.
பிறவியிலேயே
கற்பிக்கும் திறன் பெற்றவர் மிகச் சிறந்த ஆசிரியர். அவர்கள் எண்ணிக்கை குறைவு
என்பதால் ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். கற்பிக்கும் திறன் மிகுந்த,
சிறிதளவாவது பொதுநல நோக்குடைய ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது அரசின் கடமை.
எனவே,
ஆசிரியர் பயிற்சி முறையில் மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
குற்றங்களைக் களையும் தொழிலைச் செய்யும் ஆசிரியர் இன்றைய காலகட்டத்திற்கேற்ப
கற்பிக்கும் திறன் பெற்றவராகவும், பல்துறை அறிவுடையவராகவும், கணிப்பொறியைக்
கையாளும் பயிற்சி உடையவராகவும், சிறந்த ஆளுமை உடையவராகவும், நல்லதொரு வழிகாட்டும்
தன்மையுடையவராகவும் உருவாக்க வேண்டியது அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்
கூடிய ஒன்றாகும்.
ஆங்கிலம்
எவ்வாறு கற்பிப்பது எனத் தெரியாமலேயே ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள், வரலாறு
படிக்காமலேயே வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்கள், புவியியல் படிக்காமலேயே புவியியல்
கற்பிக்கும் ஆசிரியர்கள், இயற்பியல் படிக்காமலேயே இயற்பியல் கற்பிக்கும்
ஆசிரியர்கள், வேதியியல் படிக்காமலேயே வேதியியல் கற்பிக்கும் ஆசிரியர்கள், உயிரியல்
படிக்காமலேயே உயிரியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிறைந்ததுதான் நமது பள்ளிகள்.
போட்டிகள்
நிறைந்த இன்றைய நாளில், அதிவேக அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் நல்ல
தலைமுறையை உருவாக்க வேண்டிய இன்றைய சூழ்நிலையில், இயற்பியல், வேதியியல்,
தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டை மட்டும் படித்த
ஆசிரியர்கள் மற்றவற்றை வெற்றிகரமாக கற்பித்தல், எந்த அளவு நடைமுறை சாத்தியமானது என்பது
அறிந்துகொள்ளக் கூடிய, புரிந்து கொள்ளக் கூடிய, நிரூக்கத் தேவையில்லாத உண்மை.
எனவே,
இடைநிலை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் எனும்
மூன்று வகையான ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லூரிகள் மாற்றியமைக்கப்பட
வேண்டும்.
மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு
"பட்டையம்" [D.T.Ed.].
நான்கு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு "இளங்கலைப் பட்டம்" [B.Ed.].
மேலும் இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு "முதுகலை பட்டம்" [M.Ed.].
பட்டையப்
பயிற்சியில், 1 முதல் 5 வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக
அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 5 முதல் 10 வயது வரையிலான
குழந்தைகளின் மனநலவியல் [PSYCOLOGY], கல்வி வரலாறு [EDUCATION HISTORY], கல்வி பயிற்சி முறைகள் [TEACHING METHODS], மதிப்பீடு மற்றும் ஆய்வுகள்,
கணிப்பொறிக் கல்வி, போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பயிற்சி, .
. . ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கபட
வேண்டும்.
இளங்கலைப் பட்டப் பயிற்சியில், 6 முதல் 10 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது கணக்கு அல்லது அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களும், அவற்றைக் கற்பிக்கும் முறைகளும், 10 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் மனநலவியல் [PSYCOLOGY], கல்வி வரலாறு [EDUCATION HISTORY], கல்வி பயிற்சி முறைகள் [TEACHING METHODS], மதிப்பீடு மற்றும் ஆய்வுகள், கணிப்பொறிக் கல்வி, போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பயிற்சி, . . . ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
முதுகலை
பட்டப் பயிற்சியில், 11 முதல் 12 வகுப்புகளின் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது
கணக்கு அல்லது அறிவியலில் ஏதேனும் ஒரு பிரிவு அல்லது சமூக அறிவியலில் ஏதேனும் ஒரு
பிரிவு, etc. ஒரு பாடம், அதைக் கற்பிக்கும் முறைகளும், 15 முதல் 17 வயது வரையிலான
குழந்தைகளின் மனநலவியல் [PSYCOLOGY], கல்வி வரலாறு [EDUCATION HISTORY], கல்வி பயிற்சி முறைகள் [TEACHING METHODS], மதிப்பீடு மற்றும் ஆய்வுகள்,
கணிப்பொறிக் கல்வி, போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பயிற்சி, .
. . ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
அறிவியல், கணிப்பொறியியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறைப் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட் வேண்டும். எனவே, ஆசிரியர் பயிற்சி முறையில் மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டியது அவசியமானதாகும். ஆசிரியர் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக செயல்படுபவராக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, அவசியமும் கூட.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...