பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகள் உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. பெயரளவுக்கு பாடங்களை நடத்திவிட்டு மாணவர்களை பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதிலேயே தீவிரம் காட்டுகின்றன. ஆனால், உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழக மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத சூழல் நிலவுகிறது.
இதுதவிர தனியார் பள்ளிகள் இடையே நிலவும் போட்டி மனப்பான்மை மாணவர்கள், பெற்றோர்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இவற்றைக் கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற புதிய நடைமுறை, 2017-18-ம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்தத் தேர்வு மதிப்பெண்களை 1,200-ல் இருந்து 600-ஆக குறைத்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படியே உயர்கல்வி சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
இதற்கிடையே, பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால், அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படாது. மதிப்பெண் சான்றிதழ் தனியாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை 2018-ம் ஆண்டு அறிவித்தது. தனியார் பள்ளிகளின் நிர்பந்தத்தால் இந்த முடிவை மேற்கொண்டதாக தமிழக அரசின் மீது அப்போதே பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தற்போது 10, 12-ம் வகுப்புகளைப் போல பிளஸ் 1-க்கும் 2018-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடைமுறை அமலில் உள்ளது. கரோனா பரவலால் 2020-21-ம் கல்வியாண்டில் மட்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
10, 11, 12-ம் வகுப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதுதவிர நீட், ஜேஇஇ உ்ளளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகவும் போதுமான அவகாசம் கிடைப்பதில்லை.
தமிழகம் தவிர்த்து, சிபிஎஸ்இ மற்றும் பிற மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை இல்லை. இதனால் பல்வேறு காரணங்களால் பள்ளிகள் மாறும்போது மாணவர் சேர்க்கையிலும் குழப்பங்கள் நிலவுகின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வை ரத்து செய்தாலும் தனியார் பள்ளிகள் ஆதிக்கத்தை தவிர்க்க மாவட்ட அளவிலான தேர்வை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பரிந்துரை அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
We need public last year also we didn't write public we don't knowa about public "we need public" please
ReplyDelete