முதலாவதாக, ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் அனைத்துச் சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. புதிதாக விதிக்கப்படுகிறது. இதற்குமுன் ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
புத்தாண்டில் இருந்து ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்கிற அனைத்து பயணத்திற்கும் 5% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. அதன்படி, வருகிற 1-ம் தேதி முதல் (சனிக்கிழமை) வாடகை கார்களை புக் செய்யும்போது அதற்கு பயணிகள் 5% ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும்.
ரயில்வே முன்பதிவு, பேருந்து முன்பதிவு என அனைத்துக்கும் இந்த ஜி.எஸ்.டி வரி பொருந்தும். ஆட்டோவை பொறுத்தவரை, ஆன்லைன் அல்லாத சேவைக்கு ஜி.எஸ்.டி. கிடையாது. ஓலா ஆட்டோக்களுக்கு ஜி.எஸ்.டி வரி உண்டு.
இதுவரை உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஸொமேட்டோ மாதிரியான அப்ளிகேஷனுக்கு ஜி.எஸ்.டி வரி விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்விக்கி, ஸொமேட்டோவில் மக்கள் ஆர்டர் செய்யப்படும் உணவுப்பொருள்களின் மீது 5% ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும்.
அதே போல, கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற 45-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், ஜவுளிப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டியை 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய விலையானது வரும் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பட்டுச்சேலை மற்றும் அதை தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்கிறது.
ஒட்டுமொத்த ஜவுளித் துறையின்கீழ், பட்டு கைத்தறி நெசவும் வருவதால், ஜி.எஸ்.டி. உயர்வு வாயிலாக, பட்டுச் சேலைகளின் விலை கணிசமாக உயரவுள்ளது. சாதாரண பட்டுச் சேலையின் விலையும் 3,௦௦௦ ரூபாய் வரை உயரும் என்பதால், பட்டு மற்றும் பருத்தி ஆடைகளை, கைத்தறியில் நெய்யும் நெசவாளர்கள் பாதிக்கப்படுவர் என, கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் குரல் எழுப்பி வருகின்றன.
காலணி மற்றும் ரெடிமேடு துணி வகைகளுக்கு 12% ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பொருள்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு வந்தது. இதுவும் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. காட்டன் துணி வகைகளுக்கு மட்டும் ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...