இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியை மீறும் கல்வித்துறை அதிகாரிகள். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பள்ளிக்கல்வித்துறையில் ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை செய்துவரும் தங்களுக்கு எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் சங்கங்களிலுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என உறுதியளிக்கப்பட்டது. இந்த உறுதியளிப்பிற்கு மாறாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் நடைபெறும் இல்லம் கல்வித் திட்ட கற்பித்தல் பணிகளில் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். இரவு 7 மணி வரை இந்த பயிற்சி நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தப்படும் என்றும், அதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு மாறாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவிட்டுள்ளார். வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் கூடுதலாக மாலைநேர கற்பித்தல் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று கூறுவது ஆசிரியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயலாகும். இதனால் ஆசிரியர்களின் கல்வி கற்பித்தல் திறன் குறைந்துவிட வாய்ப்புள்ளது. மேலும் தொடக்கக் கல்வித்துறையில் பெரும்பான்மையாக பணிபுரியும் பெண் ஆசிரியர்கள் இரவு 7 மணி வரை மாணவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் பணியாற்றி வீடு திரும்ப வேண்டும் என்பது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். அரசும் உயர்மட்ட அதிகாரிகளும் கூறுகின்ற கருத்துக்கும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் செயல்படுத்துகின்ற நடவடிக்கைகளுக்கும் மாறுபாடு ஏற்படுவது ஏன் என்று தெரியவில்லை. திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது அடுத்தடுத்த மாவட்டங்களிலும் தொடரும் நிலை ஏற்பட்டுவிடும். இதனால் தாங்கள் தலையிட்டு இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆண்டுதோறும் அரையாண்டு தேர்வு முடிந்து கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அது பற்றிய எந்த தகவலும் கல்வித்துறையால் இதுவரை வெளியிடப்படவில்லை. தாங்கள் இந்த கோரிக்கையை பரிசீலித்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையை அறிவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்...
ந.ரெங்கராஜன்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
இணை பொதுச் செயலாளர்
அகில இந்திய ஆசிரியர் கூட்டணி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...