ஒமைக்ரானை மிகைப்படுத்த வேண்டியதில்லை: முதல்முதலில் கண்டறிந்த டாக்டர் தகவல்உலகையே அச்சுறுத்திவரும் ஒமைக்ரான் கரோனா குறித்து அரசின் விஞ்ஞானிகளுக்கு தெரியப்படுத்தியவர் தென்னாப்பிரிக்க மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி. புதிய உருமாறிய கரோனாவை எதிர்த்து போராடும் நோக்கில் நாடுகள் போட்டி போட்டு கொண்டு வழிமுறைகளை வகித்துவரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஏஞ்சலிக் கோட்ஸி இதுகுறித்து கூறுகையில், "முதலில் இது ஒரு வைரஸ் தொற்றாக இருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் சோதனை செய்த போது கோவிட் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டது.
குறிப்பாக, நவம்பர் 18ஆம் தேதி, அதே அறிகுறிகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொண்ட நோயாளிகளை நான் பார்த்தேன். ஆலோசனைக் குழுவை எச்சரித்தேன். எங்கள் ஆய்வகங்களும் ஆர்டிபிசிஆர் சோதனைகளும் ஒரு விசித்திரமான விஷயம் நடப்பதைக் கண்டறிந்தன.
அதை பார்த்து, நான் அதிர்ச்சியடைந்தேன். சில வாரங்களாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்காததால் என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். தென்னாப்பிரிக்காவில் தொற்று விகிதம் 1 சதவிகிததிற்கும் குறைவாக இருந்தது. பண்டிகைக் காலத்தில் தொடங்கும் டிசம்பர் இறுதி-ஜனவரி வரை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.
வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே, சாதாரண வைரஸ் தொற்றின் சிறப்பியல்பு இல்லாத அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை நான் பரிசோதிக்க ஆரம்பித்தேன். தென்னாப்பிரிக்கா ஒரு புதிய உருமாறிய கரோனாவை கண்டது. அது, கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த புதிய உருமாறிய கரோனா சில காலமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
தென்னாப்பிரிக்காவில் இல்லை. ஆனால் மற்ற நாடுகளில் இருக்கலாம். ஏனெனில் மற்ற நாடுகளில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இது 30 க்கும் மேற்பட்ட மாற்றங்களை கொண்டுள்ளது, டெல்டா-பீட்டாவிலிருந்து மிகவும் வேறுபட்டது. விஞ்ஞானிகள் புதிய உருமாறிய கரோனாவை அறிவித்தபோது, அவர்கள் இன்னும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினர்.
அவர்கள் அதை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் எங்களுக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மூலம் அதை கண்டறிய முடியும். விரைவான சோதனைகளால் உங்களுக்கு கரோனா இருப்பதை உறுதிப்படுத்த முடியும். மருத்துவ அறிகுறிகளைப் பார்த்தால், அந்த அறிகுறி டெல்டாவைப் போன்றது அல்ல. எனவே, இதன் மூலம் ஒமைக்ரானிலிருந்து நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நீங்கள் மீண்டும் மருத்துவ ரீதியாக பார்த்தால், வைரஸ்கள் உருவாகும்போது அவற்றின் தீவிரம் குறையும். இருப்பினும், 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் இருப்பதால் அது எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. எனவே, மருத்துவ ரீதியாக ஆரம்ப சுகாதார நிலைகளை பார்த்தால், பெரும்பாலும் லேசான அறிகுறிகளே தென்பட்டுள்ளன.
இளைஞர்கள், முதியவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினர் தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தால், அவர்களுக்கு லேசான காய்ச்சலே ஏற்படுகிறது. எனவே, தற்போதைக்கு தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிக்கிறது.
அறிகுறிகள் பெரும்பாலும் சோர்வாக இருக்கும். உடல் மற்றும் மற்ற பகுதிகளில் வலிகள் ஏற்படலாம். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு கடுமையான தலைவலி மற்றும் சோர்வு ஏற்பட்டது. ஆனால், சுவை, வாசனை இழப்பு போன்றவை ஏற்பட்டதாக யாரும் கூறவில்லை. அதேபோல், பாதிக்கப்பட்டவர்களில், தீவிரமான மூக்கு அடைப்பு ஏற்பட்டதாகவோ வெப்ப நிலை அதிகரித்துள்ளதாகவோ யாரும் குறிப்பிடவில்லை. எனவே, ஒமைக்ரான் குறித்து மிகைப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...