அரசு உத்தரவை ஏற்று, அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்கிறார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் அதன் செயலாளர் வாசுகி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் கிராமப்புறங்களை சேர்ந்த பல ஏழை மாணவ, மாணவிகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அந்த குழந்தைகளால் மீண்டும் பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கல்வி ஆண்டை ‘பூஜ்ய’ கல்வி ஆண்டு என்று அறிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பிற்காக அவர்கள் வசிக்கும் ஒவ்வொரு தெருக்களிலும் ஆன்லைன் வகுப்புகளை கற்பதற்கான ஏற்பாடுகளை செய்து அந்த மாணவர்களின் படிப்பை கண்காணிக்க தகுதியான நபர்களை நியமிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, நீதிமன்றம் அப்போதைக்கப்போது பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் கிராமப்புற மாணவர்களின் படிப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
அரசு தரப்பின் இந்த பதிலை பரிசீலித்த நீதிபதிகள், தற்போது அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு குழந்தைகள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்கிறார்கள். எனவே, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...