குழந்தை வளர்ப்பு என்பது இன்றைய சூழ்நிலையில் ஒரு கடினமான செயலாக மாறிவிட்டது. அதிலும் சிங்கிள் பேரண்ட் எனும் ஒற்றைப் பெற்றோர் என்பது சவாலான காரியம்தான். தன் துணையின்றி தனியாகக் குழந்தையை வளர்க்கும் ஒரு ஆணோ, பெண்ணோ குடும்பத்தில் மட்டுமின்றி சமூகத்திலும் பல்வேறு சவால்களை சந்திக்கிறார்கள்.
கணவன் அல்லது மனைவி இறந்துவிட்டாலோ, இருவரது உறவு முறிந்துவிட்டாலோ ஒற்றைப் பெற்றோரால் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றன. திருமணம் செய்துகொள்ளாதவர்களால் தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளும் இதில் அடங்கும்.
ஆணின்றி ஒரு பெண் மட்டும் குழந்தையை வளர்த்தால் அவள் தாயாக மட்டுமின்றி அந்த குழந்தைக்குத் தந்தையாகவும் இருக்க வேண்டும். அதுபோலவே ஆணும், தந்தை மட்டுமின்றி தாயாகவும் இருக்க வேண்டும்.
தாய், தந்தை இருவரின் பணிகளையும் ஒருவரே செய்ய வேண்டும். ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகளும், பெற்றோருடன் வாழும் மற்ற குழந்தைகளைப் போலவே மகிழ்ச்சியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால், ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் பல. கணவன்/மனைவி உறவு முறிவதனால் தாங்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, குழந்தைகளும் அந்தப் பிரிவினையை உணர்கிறார்கள்.
ஒற்றை பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள்
♦ பொருளாதாரம்
♦ சமூக தாக்கங்கள்
♦ குழந்தைகளின் உளவியல் சிக்கல்கள்
♦ சுகாதாரப் பராமரிப்பு
♦ பெற்றோரின் மனநலன்
♦ குழந்தைகளின் மனநலன்
♦ குடும்பத்தை சமாளித்தல்
ஒரு குழந்தை, தனது தனிப்பட்ட குடும்பத்தினரின் பிரச்னைகளுக்கு ஆளாகும்பட்சத்தில் குழந்தை வளர்ப்பு மேலும் சிக்கலாகிவிடும். இருப்பினும், சிலவற்றைக் கவனத்தில்கொள்வதன் மூலம் இந்த சவால்களை சமாளிக்கலாம்.
கடினமாக உணராதீர்கள்
நீங்கள் ஒற்றைப் பெற்றோராக இருக்கும்பட்சத்தில், உங்கள் குழந்தைகளுக்காக உணவு சமைக்க வேண்டும், அலுவலகத்திற்கும் செல்ல வேண்டும்.
ஆனால், எல்லா நேரங்களிலும் உணவு சமைக்க முடியாது அல்லது அனைத்து நேரங்களிலும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க முடியாது. இதனிடையே குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும். என்னதான் திட்டமிட்டாலும் உங்களால் அனைத்து வேலைகளையும் செய்துமுடிக்க முடியாது. எனவே, முடிந்தவற்றைச் செய்யுங்கள்.
குழந்தையை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள்.
கடந்த காலத்தில் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திய நினைவுகளை குழந்தைகளிடம் ஒருபோதும் திணிக்க வேண்டாம். முகத்திலும் காட்டிக்கொள்ள வேண்டாம். உங்களை நீங்கள் கடினமாக உணரும்பட்சத்தில் குழந்தைகளும் பாதிக்கப்படும்.
எதிர்மறையில் கவனம் செலுத்த வேண்டாம்
உங்கள் குழந்தை உங்களுடைய கணவன்/மனைவி அதாவது மற்றொரு பெற்றோரிடம் தொடர்பு கொண்டிருந்தால் அதனை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. குழந்தைக்கு இருவரின் அன்பும் ஆதரவும் இருந்தால் நல்லதுதான்.
அதேநேரத்தில் குழந்தை அவ்வாறு தொடர்பில் இருக்கக்கூடாது என்று விரும்பினால் உங்கள் துணையுடன் பேசியபின்னர் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி புரியவைக்க வேண்டும்.
உங்கள் துணை குறித்து குழந்தைகளின் முன்னிலையில் விமர்சிக்கவோ அல்லது புகார் செய்யவோ கூடாது. கடந்த கால நினைவுகள் குறித்துப் பேச வேண்டும். அது உங்களை கோபமடையக் கூட வைக்கும். ஒட்டுமொத்தமாக குழந்தைக்கு எதிரான விஷயங்களில் கவனம் செலுத்தாதது தவிர்த்து விடுங்கள்.
வெளிப்படையாக இருங்கள்
குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிந்தபின்னர் பெற்றோர் பிரிய நேரிட்டால் அதாவது உங்கள் துணை இறந்திருந்தாலோ அல்லது விவாகரத்து பெற்றாலோ அல்லது உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் ஈடுபட வேண்டாம் என நினைத்தால் அந்த நேரத்தில் குழந்தைகளிடையே பயம் ஏற்படலாம். இந்த நேரத்தில் குழந்தைகள் தங்களுடைய தனிப்பட்ட எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த அவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்களின் கடினமான கேள்விகளுக்கு பதிலளிப்பது சவாலாக இருக்கலாம், ஆனால், நன்கு அறிந்த குழந்தையிடம் வெளிப்படையாக இருப்பதே உறவை பலப்படுத்தும்.
உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்
உங்கள் மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை நீங்கள் எவ்வாறு கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கான பொழுதுபோக்காக இருந்தாலும், உங்கள் கல்வி, வேலை, கனவு எதுவாக இருந்தாலும் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்வது உங்கள் குழந்தையின் வாழ்க்கையையும் மேம்படுத்த உதவும். இவ்வாறு இருப்பவர்களே மகிழ்ச்சியானவர்களாகவும் சிறந்த பெற்றோராகவும் இருக்க முடியும். மேலும் உங்களுடைய வளர்ச்சி குறித்து யோசித்தால் பொருளாதாரம் தானாக மேம்படும்.
நம்பகமான உதவியைத் தேடுங்கள்
ஒற்றைப் பெற்றோருக்கான கடமைகள், சவால்கள் அதிகம். எல்லாவற்றையும் நீங்களே செய்யும்போது ஒரு அழுத்தம் ஏற்படலாம். எனவே, உங்களுடைய வாழ்க்கையிலும் உங்கள் குழந்தையின் வாழ்க்கையிலும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களை ஈடுபடுத்துங்கள். மற்றவர்களுடன் பழகும்போது குழந்தைக்கு வலுவான பிணைப்பு கிடைக்கும். அதேநேரத்தில் பிற நபர்கள், உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பது அவசியம்.
ஒற்றைப் பெற்றோருக்கு பல சவால்கள் இருக்கலாம். ஆனால், நீங்களும் மற்றவர்களைப் போல மகிழ்ச்சியாக இருக்க முடியும், உங்கள் குழந்தைகளும் சமூகத்தில் ஒரு சிறந்த மனிதராக வலம்வர முடியும். உங்கள் மனதையும் உடலையும் பாதிக்கும் விஷயங்களை புறந்தள்ளி முழுக்க முழுக்க உங்களைப் பற்றியும் உங்கள் குழந்தையைப் பற்றியும் மட்டும் யோசியுங்கள்.
- நன்றி
தினமணி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...