பொதுவாக வகுப்பறைகளில் பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைக் கண்டு மாணவர்கள் அச்சமடையும் சூழலால் மாணவ, மாணவியர்களே ஆசிரியர்களுக்கு இணையாகப் பிற மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் வகையில் முன்மாதிரி பயிற்சித் திட்டத்தை ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி, புதூர் லூர்தன்னை பள்ளி நிர்வாகம் இணைந்து 3 மாதத்திற்கு முன்பு தொடங்கின. 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகள் 12 பேர் கொண்ட குழுவினருக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜூனியர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் அகஸ்திய பாரதி வழிகாட்டுதலுடன், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சகாயமேரி மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்களைப் போன்று பாடக்குறிப்பு எடுத்தல், ஒரு பொருளின் அனைத்துத் தகவல்களையும் சேகரித்தல், அதற்கான உதாரணங்களை மாதிரிப் படமாகக் காட்டி விளக்கமளித்தலுக்குத் தயார்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தன்னெழுச்சி முறையில் தனக்குத்தானே தயாராகி ஆசிரியர்களே வியக்கும் வகையில் பாடமெடுக்கின்றனர். இவர்கள் மூலம் மதுரையிலுள்ள அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கத் திட்டமிடுகின்றனர். இவர்களை அப்பள்ளி ஆசிரியை சேவியர் செல்வி ஒருங்கிணைத்து செயல்படுகிறார்.
இதுகுறித்து அகஸ்திய பாரதி கூறும்போது, ’’மாணவர்கள் பாடங்களைத் தாங்களாகவே கற்று, குறிப்பெடுத்து, பெற்றோர் முன் பயிற்சி, கண்ணாடிப் பயிற்சி, காணொலிப் பயிற்சி போன்றவை மூலம் தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களாக உருவாக்குகிறோம். இந்தப் புதுமையான கல்வியை இந்தியாவில் முதன்முறையாக மதுரையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். கோவை, சென்னை, நாமக்கல், கரூர்,சேலம் மாவட்டங்களிலும் இக்கல்வி முறையை அறிமுகப்படுத்துகிறோம். நேரடி வகுப்பு, ஆன்லைன், ஒன் டு ஒன் முறையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதனால் படிப்புத் திறன், பண்பாட்டுத் திறன், விளையாட்டுத் திறன், படைப்புத் திறன் போன்ற கூடுதல் திறன்கள் மேம்படும். உணவு, உடல், நேர, மூளை, ஆளுமை மேலாண்மை, கவனமே தியானம், படிப்பே தியானம், உணவே, உடலே தியானம் என, பல்வகை தியான முறைகள், வாழ்வியல் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
மனப்பாடமின்றி நன்கு புரிந்து, உணர்ந்து, வாழ்வியல் நடைமுறைச் செயல்பாடுகளைத் தெளிவாக அறிந்து கற்க உதவுகிறது. மேலும், இந்த மாணவிகள் பாடமெடுக்கும் நிகழ்வை யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு, பிற மாணவர்களுக்கு உதவுகிறோம். இதுவரை 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக ஊடகங்களில் பார்த்துப் பயன்பெற்றுள்ளனர். தேவையான பள்ளிகளைத் தேடி இலவசமாகப் பயிற்சி அளிக்கத் தயாராக உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...