சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 11 கடலோர மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை ெபய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதே நேரத்தில் அவ்வப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயமும் கடும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. சென்னையில் விடியவிடிய மழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 28ம் தேதி (இன்று) வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் என்பது திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிக கனமழை இருக்கிறது. இங்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
29ம் தேதி (நாளை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
30ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
1ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மகாபலிபுரம், செங்கல்பட்டு, செய்யூரில் தலா 18 செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் கட்டப்பாக்கம் 17 செ.மீ, திருக்கழுக்குன்றம் 16 செ.மீ, மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டையில் தலா 15 செ.மீ, திருவள்ளூர் 13 செ.மீ, காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம், பொன்னேரி, தாம்பரம், அம்பத்தூரில் தலா 12 செ.மீ., சிதம்பரம், காரைக்கால், கொரட்டூர், திருப்போரூர், ரெட் ஹில்ஸில் தலா 11 செ.மீ, கேளம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், அண்ணா பல்கலைக்கழகம், தாமரைப்பக்கம், சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 10 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
இன்று குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 29ம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் இதன் காரணமாக 29, 30ம் தேதி அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
1ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். 29ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி தான் நகரும். இதனால், இப்போதைக்கு நமக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது வரும் போது வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு ஆபத்து இதுவரை இல்லை. சென்னைக்கு இன்று வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் அளவு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
* இயல்பை விட 74% அதிகம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் நேற்று வரை 60 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இயல்பாக, இந்த நேரத்தில் 34 செ.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால், 74 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. விழுப்புரத்தில் 152 சதவீதம், திருப்பத்தூர் 141 சதவீதம், கோவை 115 சதவீதம், புதுச்சேரி 109 சதவீதம், கன்னியாகுமரி 107 சதவீதம், பெரம்பலூரில் 102 சதவீதம், சென்னையில் 77 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...