தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பீட்டர் ராஜா தலைமை தாங்கினார். அருள் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் கந்தசாமி வரவேற்றார்.
மாநில பேச்சாளர் ராஜி செயற்குழு கூட்டம் குறித்து விளக்கி பேசினார். மாநில பொருளாளர் அன்பரசன் சங்கத்தின் நிதிநிலை குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விளக்கி பேசினார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் துப்புரவாளர், இரவு காவலர், இளநிலை உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். முதன்மை கல்வி அலுவலரின் பணிச்சுமையை குறைக்க ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பராமரிக்கும் வகையில் கணினி தொழில்நுட்பவியலாளர் நியமனம் செய்யப்பட வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும், அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணி புரிவதை உறுதி செய்ய வேண்டும், காலியாக உள்ள வட்டார வள மேற்பார்வையாளர் பணியிடங்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும், அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...