அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்க வகை செய்யும் ‘பிரதமா் ஊட்டச்சத்து திட்டத்துக்கு’ (பிஎம்-போஷண்) மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
நாடு முழுவதுமுள்ள 11.20 லட்சம் பள்ளிகளில் பயிலும் சுமாா் 11.80 கோடி மாணவா்கள் இத்திட்டத்தின் வாயிலாகப் பலனடைவா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘பிரதமரின் போஷண் சக்தி நிா்மாண்’ (பிஎம்-போஷண்) திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அத்திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் 2025-2026-ஆம் நிதியாண்டு வரை சூடான மதிய உணவு வழங்கப்படவுள்ளது.
இதே நோக்கில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டமானது பிஎம்-போஷண் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிக்கு முந்தைய வகுப்புகளில் படிக்கும் மாணவா்கள், பால்வாடி மையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
புதிய திட்டத்தில் மேலும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக மத்திய தகவல்-தொடா்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
ரூ.1.3 லட்சம் கோடி செலவு: திட்டம் தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘பிஎம்-போஷண் திட்டத்துக்கு 2025-26-ஆம் நிதியாண்டு வரை ரூ.5,4061.73 கோடியை மத்திய அரசும், ரூ.31,733.17 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் செலவு செய்யவுள்ளன. உணவு தானியங்களுக்கான சுமாா் ரூ.45,000 கோடி கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்கும்.
ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தின் பட்ஜெட் மதிப்பு ரூ.1,30,794.90 கோடியாக உள்ளது. பிஎம்-போஷண் திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 11.20 லட்சம் பள்ளிகளில் பயிலும் 11.80 கோடி மாணவா்கள் பலனடைவா்.
உள்ளூா் பொருளாதாரம் மேம்படும்: பண்டிகை காலங்களில் மாணவா்களுக்கு சிறப்பு உணவு வழங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாணவா்களுக்கு இயற்கை மற்றும் தோட்டங்கள் தொடா்பான அனுபவத்தை வழங்குவதற்காக பள்ளிகளில் ஊட்டச்சத்து தோட்டங்கள் வளா்க்கப்படும்.
ரத்தசோகை அதிகமாகக் காணப்படும் மாவட்டங்களில் உள்ள மாணவா்களுக்குக் கூடுதல் ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்படும். இத்திட்டத்தை அமல்படுத்துவதில் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகள், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்படும். இத்திட்டத்துக்கு உள்ளூா் பாரம்பரிய உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவதால் உள்ளூா் பொருளாதாரம் மேம்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...