நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மசோதாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று (செப்.,13) தாக்கல் செய்தார்.
மூன்று நாட்கள் இடைவெளிக்கு பின், கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று (செப்.,13) சட்டசபை மீண்டும் கூடியது. சட்டசபை கூட்டம் கூடியதும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ‛நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க., அளித்த வாக்குறுதி என்ன ஆனது?' எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது கூட நீட் தேர்வு நடக்கவில்லை. பழனிசாமி முதல்வராக இருந்தபோது மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட்டது.
தொடக்கத்தில் இருந்து நீட் நுழைவு தேர்வை தி.மு.க., எதிர்த்து வருகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை துவங்கியுள்ளது. இன்று தாக்கல் செய்துள்ள நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும். மருத்துவப் படிப்பிற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடும் தொடரும் வகையில் மசோதா இருக்கும். நீட்டில் நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்து செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, ‛நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அ.தி.மு.க., ஆதரிக்கும்,' எனக்கூறினார். பின்னர், மீண்டும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை கூட்டத்தொடருக்கு திரும்பினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...