தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம், பர்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோவையிலுள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதி நேர பி.இ. பி.டெக் பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கு (2021-22) பகுதி நேர முதலாமாண்டு பி.இ, பி.டெக். பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணி கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கியது. மாணவர்கள் ஆன்லைன் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று, டிப்ளமோ படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராகவோ இருக்க வேண்டும் எனத் தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிப்பவர்கள் பதிவுக் கட்டணத்தை இணையதளம் வாயிலாகச் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரவரிசை வெளியீடு தேதி
தர வரிசைப் பட்டியல் வெளியீடு தொடர்பாக, பகுதி நேர பி.இ. பி.டெக். மாணவர் சேர்க்கைச் செயலரும், கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வருமான ஏ.ராஜேஸ்வரி, மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ ஆகியோர் கூறும்போது, ‘‘பகுதி நேர பி.இ, பி.டெக். முதலாமாண்டு படிப்புக்கு இதுவரை 800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பப் படிவங்களைப் பதிவு செய்யலாம். இந்தக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறும். மாணவர் சேர்க்கை, விண்ணப்பக் கட்டணம், முக்கியத் தேதிகள் உள்ளிட்ட விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 22-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தகுதியான மாணவர்கள் வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்தலாம். சிறப்புப் பிரிவினருக்கு செப்டம்பர் 26ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் 30-ம் தேதி சேர்க்கைக்கான கடிதம் வழங்கப்படும்.
மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 94869 77757, 0422-2574071, 2574072 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்’’ என்று தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...