தமிழகத்தில் சிறையில் இருக்கும் பெண்களுடைய குழந்தைகளின் கல்வி நிலை மற்றும் அவர்கள் சட்டப்படி பெற வேண்டிய சலுகைகள் மற்றும் அதன் பயன்கள் அனைத்தும் பெற்றுள்ளார்களா? என்பது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
''தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவரின் கடிதத்தில், சிறையில் உள்ள பெண்களின் குழந்தைகள், அவர்களுடைய கல்வி நிலை குறித்து விவரங்கள் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 'சிறைச்சாலைகளில் உள்ள பெண்களுடைய குழந்தைகளின் கல்வி நிலை' என்ற தலைப்பில் கீழ் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய சிறை வாழ் பெண்களின் குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு இலவசக் கல்வி சட்டம் 2009 மற்றும் இளைஞர் நீதிச் சட்டம் 2015 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட வேண்டிய சலுகைகள் வழங்காமல் இருப்பதைக் கண்டறிந்து, அந்த ஆய்வு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் அத்தகைய சிறைவாழ் பெண்களுடைய குழந்தைகளின் கல்வி நிலை மற்றும் அவர்கள் சட்டப்படி பெற வேண்டிய சலுகைகள் மற்றும் அதன் பயன்கள் அனைத்தும் பெற்றுள்ளார்களா? என்பது குறித்து விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.
இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...