புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ மீண்டும் திருத்தி வெளியிட்டுள்ளது. இதன்படி தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து பிற வகுப்புகளுக்கு அக்டோபர் 1 முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளன. பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் அக்.25 முதல் தொடங்குகின்றன.
நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொழில்நுட்பக் கல்லூரிகளும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கரோனா 2-வது அலை காரணமாகப் புதிய கல்வியாண்டு தொடக்கமும், மாணவர் சேர்க்கையும் தள்ளிப் போயுள்ளது. இதனையடுத்து, புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ திருத்தி வெளியிட்ட நிலையில், தற்போது மீண்டும் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், முதுகலை மேலாண்மை நிறுவனங்கள், தொலைதூரக் கல்வி, ஆன்லைன் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை அங்கீகாரத்தைப் பெற ஜூலை 15 கடைசித் தேதி ஆகும். அதேபோல பல்கலைக்கழகங்கள் /கல்வி வாரியங்கள் கல்லூரிகளுக்கான இணைப்பை வழங்க ஆகஸ்ட் 10 கடைசித் தேதி ஆகும்.
2021- 22ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 30-ம் தேதி முடிவுபெறும். தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அக்டோபர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்.
முதலாம் ஆண்டு தொழில்நுட்பப் படிப்புகளுக்கான வகுப்புகள் அக்டோபர் 25-ம் தேதி தொடங்குகின்றன. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் தொழில்நுட்பப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற அக்டோபர் 15 கடைசித் தேதி ஆகும்.
எனினும், முதுகலை மேலாண்மைப் படிப்புகளுக்கான கால அட்டவணை மாற்றப்படவில்லை. அதன்படி முதுகலை மேலாண்மை நிறுவனங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் வகுப்புகளைத் தொடங்கலாம். அதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 கடைசித் தேதி ஆகும். முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் முதுகலை மேலாண்மைப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற ஆகஸ்ட் 6 கடைசித் தேதி ஆகும்.
கரோனா தொற்று நெருக்கடி குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்களை முழுக் கல்விக் கட்டணம் செலுத்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.
மாணவர்களிடம் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும். மேலும், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை எக்காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் அந்த உத்தரவுகளைக் கல்லூரிகள் திரும்பப் பெற வேண்டும். பேராசிரியர்களுக்குரிய மாத ஊதியத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.
பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் அல்லது இரண்டு முறைகளையும் பின்பற்றி வகுப்புகளைத் தொடங்கலாம்.
கரோனா காலச் சூழலுக்கு ஏற்றவாறோ அல்லது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சக விதிமுறைகளின்படி கல்வி அட்டவணை மாற்றப்படலாம்''.
இவ்வாறு ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...