பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு
மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
நாடு
முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் காரணமாக பல்லாயிரக்
கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . தமிழ்நாடு அரசு போர்க்கால
அடிப்படையில் இப்பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து
நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து , அதில் வெற்றியும் பெற்று வருகிறது .
இந்நிலையில் , பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும்
மாணவர்களின் கல்வியிலும் , பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு
அரசு , பொதுத் தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து
தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இப்பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக
, ஒன்றிய அரசு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் ( CBSE )
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்கவிருந்த பொதுத்தேர்வை
ஏற்கெனவே ரத்து செய்துள்ளது . பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்திற்காக ,
தத்தமது மாநில பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன .
இப்பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து , கடந்த மூன்று தினங்களாக
பள்ளியளவில் தொடங்கி , மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவர்கள் ,
பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , ஆசிரியர் சங்கங்கள் , கல்வியாளர்கள் , பல்வேறு
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் , ஊடகவியலாளர்கள் ,
பொது சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு
தரப்பினரிடமும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் கருத்துக்கள்
கவனமுடன் கேட்டறியப்பட்டன. பல்வேறு தரப்பினரும் பொதுத் தேர்வு நடத்துவது
குறித்து ஆதரவாகவும் , மறுத்தும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும் ,
அனைத்துத் தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட
வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர் . கொரோனா பெருந்தொற்றின்
இரண்டாம் அலை , மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீவிரமாக இருந்து
வருகிறது , இதைத் தொடர்ந்து மூன்றாவது அலையும் வர வாய்ப்புள்ளது என்று
மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . மேலும் தற்போதுள்ள
விதிகளின்படி , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி
செலுத்த இயலும் என்ற நடைமுறை இருப்பதால் அவ்வயதுக்குக் குறைவான , தடுப்பூசி
போடப்படாத மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வரச்செய்வது , தொற்றினை
அதிகரிக்கச் செய்யலாம் என்றும் வல்லுநர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
மாநில கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்பட
வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இந்த அரசு உறுதியாக இருப்பினும் ,
தேர்வினை மேலும் தள்ளிவைப்பது , மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு
உள்ளாக்கும் என்று மருத்துவர்கள் கருதுவதால் , அவர்களது அறிவுரை மற்றும்
பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் ,
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது .
இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு
செய்ய , பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ,
உயர்கல்வித் துறை செயலாளர் , சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் , பள்ளித்
தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் . இக்குழு
மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து ,
விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் . இக்குழு சமர்ப்பிக்கும்
அறிக்கையின் அடிப்படையில் , பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்
தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் . அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக்
கொண்டு மட்டுமே , தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும்
சேர்க்கை நடைபெறும் .
பெருந்தொற்றின் காரணமாக , தமிழ்நாட்டில் பொதுத்
தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் , அகில இந்திய அளவில்
நடத்தப்படும் “ நீட் ” போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக
இருக்காது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது .'
இது குறித்த அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில் ,
உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய
வலியுறுத்தி , மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம்
எழுதியுள்ளேன் . கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் , மாணவர்களின் உடல் நலன்
மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும்
, மாநில கல்வித் திட்ட அடிப்படையில் , உயர்கல்வி சேர்க்கை எந்தவிதத்திலும்
பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்.
Tutorial students?
ReplyDelete