கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அட்டக்கட்டியில்உள்ள அரசுப் பள்ளியில் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். வால்பாறையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் உள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளி, நல்லகாத்து பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளி, வால்பாறையில் உள்ள பழங்குடியின குழந்தைகள் பயிலும் உண்டு உறைவிட பள்ளி, ரொட்டிக்கடை பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் அமைச்சர் நேற்று ஆய்வு செய்தார்.
பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், பள்ளி பாதுகாப்பு, கட்டிடங்களின் தரம் ஆகியவற்றை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “மலைப் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளின் நிலை குறித்தும், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியின் தரம், அதற்கான கட்டமைப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் கோவையில் கல்வி அலுவலர்கள், தலைமைஆசிரியர்கள், பணியாளர்களை சந்தித்து, பள்ளி கட்டிடங்களின் நிலை, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம், பேருந்து வசதி இல்லாத காரணத்தால் குழந்தைகள் பள்ளிகளுக்கு வர முடியாமல் அச்சத்தில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் பள்ளியை சீக்கிரமாக திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது கரோனா காலத்தில் பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கரோனா முடிந்ததும் பள்ளிகள் திறக்கப்படும்.
தற்போதைய சூழலில் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கல்வி முறையை செயல்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்றார். ஆய்வின்போது, பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் சண்முகசுந்தரம் உடனிருந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...