புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் பாட புத்தகங்கள் வழங்கும் பணிக்காக, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், இன்று முதல் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, கல்லுாரிகளின் முதல்வர்களும் கல்லுாரிகளுக்கு வர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ல் புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளது. அதனால், மாணவர்களுக்கான கல்வி பணிகளை துவக்க, மத்திய - மாநில அரசுகள், கொரோனா ஊரடங்கில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.அதனால் அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இன்று முதல் பணிக்கு வர, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கல்லுாரிகளிலும், முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், முதற்கட்ட நிர்வாக பணிகளை மட்டுமே மேற்கொள்வர். பிளஸ் 1 மற்றும் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்குவது, பள்ளிகளில் புதிய வகுப்புக்கான மாணவர்களுக்கு, பாட புத்தகங்களை வாங்குவது போன்ற பணிகள் துவங்க உள்ளன.
மேலும், அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்வது, மாணவர்களின் கடந்த கல்வி ஆண்டு தேர்ச்சி பட்டியலை தயாரித்து, அவற்றை அடுத்த வகுப்புகளுக்கு மாற்றுவது, மாற்றுச் சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு, அவற்றை வழங்குவது போன்ற பணிகளை வரும் நாட்களில் மேற்கொள்ள, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்திஉள்ளது.
இந்த பணிகளுக்காக, பள்ளிகள், கல்லுாரிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், தங்களின் நிர்வாக பணிக்கு உதவியாக, ஆசிரியர்களை சுழற்சி முறையில் பணிக்கு வரவும் அறிவுறுத்தி உள்ளனர். முதலில் நிர்வாக பணிகளை மேற்கொண்ட பின், அரசின் வழிகாட்டுதலின்படி, பாட வகுப்புகளை துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...