மனிதனின் சிந்தனை, அறிவுத்திறன், கற்பனை, கண்டுபிடிப்புகள் போன்றவை தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றைக் கருத்தில் கொண்டே பல்வேறு வளர்ந்துள்ள நாடுகளும் கட்டாயம் அவரவர் தாய்மொழியைப் பாட பயிற்று மொழியாகப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. மனிதனின் புத்தாக்க சிந்தனைகள் அனைத்தும் அவரவர் தாய்மொழியில் தாம் உதயமாகின்றன என்பது மானுடவியலாளர்களின் உறுதி மிக்க கருத்தாகும்.
இத்தகைய நிலையில்,
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா,
கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தாய்மொழி கட்டாயப் பயிற்று
மொழியாக ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உண்மையில் உலக மொழிகளுள்
தொன்மையான செம்மொழி தகுதி படைத்த வாழும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டவர்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கற்காமல் மழலையர் கல்வி
முதற்கொண்டு மருத்துவம் பொறியியல் கலை அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட
உயர்கல்வித் தகுதி பெறமுடியும் என்ற அவலநிலை உலகில் வேறெங்கினுமில்லை.
இன்றைய
அறிவியல் தகவல் தொழில்நுட்பம் வானளாவ வளர்ந்திருக்கும் சூழலில் அவரவர்
தாய்மொழியில் அவரவரும் கலந்துரையாடித் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள துல்லிய
மொழிபெயர்ப்புக் கருவிகள் மலிந்து காணக் கிடைக்கின்றன. தாய்மொழியாம் தமிழ்
மொழி கற்பது அவமானம்; பிற மொழியறிவே அடையாளம் என்னும் மொழியழிப்புடன் கூடிய
இனச்சிதைவு சூழ்ச்சி பரப்புரை வலைக்குள் வீழ்ந்த பெற்றோரது மனத்தில்
படிந்துள்ள அழுக்கை அகற்றுவது இன்றியமையாதது.
இத்தகு
சூழலில், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மக்களுக்கான முத்தமிழறிஞர்
கலைஞர் வழியில் நல்லாட்சியை வழிநடத்தும் தமிழ்நாடு அரசு, இந்திய ஒன்றிய
அரசால் செம்மொழியாம் தமிழ் மொழியென்று அறிவிக்கைப் பெற்ற இந்நன்னாளில் (
ஜூன் 6) அனைத்து வகையான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இனி தாய்மொழியாம்
தமிழ் மொழி கட்டாயப் பயிற்று மொழியாகவும் பாடமாகவும் பயிற்றுவிக்க வேண்டும்
என்று அரசாணை பிறப்பித்து தமிழுக்கு அரண் சேர்க்க வேண்டும்!
மேலும்,
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தமிழ்வழியில் தொடக்கக்கல்விப்
பயின்றோருக்கே முன்னுரிமை என்பதை விரிவுபடுத்துதல் அவசியம். இதுபோன்ற நல்ல
பயனுள்ள தரமான நடவடிக்கைகள் மூலமாகவே, உலகை ஆளும் தமிழ் மொழி ஒவ்வொரு
தமிழனின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றென்றும் ஆட்சி செய்ய வேண்டும்
என்பதே தமிழ் ஆர்வலர்களின் நீடித்த நிலைத்த கருத்தாகும்.
தொடர்புக்கு
7010303298
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...