Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை சரிசெய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை!

அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவுக்கான காரணங்கள், அதை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க நிபுணர்கள் குழுவை அமைக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான சம்பளம் நிர்ணயிக்க, இடைநிலை கல்வி ஆசிரியராக பணியாற்றிய நாட்களை கணக்கில் கொள்ள மறுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வில், விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் பதில் அளிக்க வழக்கறிஞர் நீலகண்டன், 'நோட்டீஸ்' பெற்று கொண்டார்.

இவ்வழக்கில், நீதிபதிகள் பிறப்பித்த, இடைக்கால உத்தரவு:தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு என்பதால், அரசு பள்ளிகளில் படிக்கும், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் நிலையை ஆராய வேண்டியதுள்ளது. அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதியின்மை, குறைவான கல்வி தரத்தால், மாணவர்கள் சேர்க்கை குறைகிறது.

குறைவான கல்வி தரத்தால், அரசு பள்ளி மாணவர்களால், மருத்துவக் கல்லுாரிகளில் இடம் பெற முடியவில்லை. மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்க வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

உயர் கல்வி மையமாக தமிழகம் திகழ்ந்தாலும், பள்ளி கல்வியின் தரத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக கிராமப்புற அரசு பள்ளிகளில் தரம் குறைந்தாக உள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவனால் தனது பெயரை எழுத தெரியவில்லை. அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. குறைவான மாணவர்கள் உள்ளனர். அனைத்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் எடுக்கிறார்.

பள்ளி கல்வியில் ஏதோ தவறு உள்ளது. அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். விளிம்புநிலை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் தான், அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, தரமான கல்வி வழங்க வேண்டும்.

தேவையான உள்கட்டமைப்பை வழங்கி, தகுதியான ஆசிரியர்களை நியமித்து, கல்வி தரத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களையும் கண்காணிக்க வேண்டும். அப்போது தான், மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்கும்.

எனவே, அரசு பள்ளிகளில் கல்வித் தரம் குறைவுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க, கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவை, அரசு அமைக்கும் என, நம்புகிறோம் அல்லது கல்வி தரத்தை உயர்த்த, அரசே எந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை, சுற்றுச்சுவர் வசதி அளிக்கும்படி, ஐந்து ஆண்டுகளுக்கு முன், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தும், அதை அமல்படுத்தவில்லை. அதுகுறித்து, அரசு தரப்பில் அறிக்கை அளிக்க வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில், அரசு பள்ளிகளை, அருகில் இயங்கும் தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொள்வதாக, மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தெரிவித்தார். 

அதேபோல், அரசு பள்ளிகளை தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொண்டால், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வி தரத்தை உயர்த்தவும் முடியும். 

கல்வி தரத்தை உயர்த்த, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, அரசு வழக்கறிஞர் நீலகண்டனும் தெரிவித்துள்ளார்.

எனவே, நீதிமன்றம் பரிந்துரைத்தபடி, நிபுணர் குழுவை அமைப்பது அல்லது அரசு தரப்பில் வேறு நடவடிக்கை ஏதும் இருந்தால், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணை, ஆக.,2க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive