ஓட்டுனர்
உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்கள், வரும் செப்டம்பர் 30 வரை
செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக
ஓட்டுனர் உரிமம், உடல் தகுதி சான்று, உள்ளிட்ட ஆவணங்களை காலாவதி தேதிக்கு
பிறகு, மக்களால் புதுப்பிப்பது இயலாமல் போனது. இதனால் வாகன ஓட்டிகள்
மிகுந்த சிரமம் அடைந்தனர். கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக இந்த
ஆவணங்களின் காலாவதி தேதியை மத்திய அரசு அவ்வப்போது நீட்டித்து வருகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து ஓட்டுனர் உரிமம்,
பதிவு செய்தல் உள்ளிட்ட மோட்டார் வாகனம் தொடர்பான ஆவணங்களின் காலாவதி தேதி
முடிந்து இருந்தாலோ, புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ அவற்றை வரும்
செப்டம்பர் 30ம் தேதி வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு
அறிவித்துள்ளது. இதுவரையில் இதற்கு 6 முறை மத்திய அரசு நீட்டிப்பு
அளித்துள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாடு சான்றிதழுக்கு இந்த கால நீட்டிப்பு
வழங்கப்படவில்லை.
மாசு கட்டுப்பாடு நாடு
முழுவதும் ஒரே சான்றிதழ்: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று
வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989ன் கீழ்,
நாடு முழுவதிலும் அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான மாசு
கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதில் வாகன உரிமையாளரின் பெயர்,
முகவரி, செல்போன் எண், இன்ஜின் எண், சேசிஸ் எண் உள்ளிட்ட விவரங்கள்
அடங்கும். இந்த விவரங்கள் தேசிய பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இதற்காக
வழங்கப்படும் க்யூஆர் கோடு மூலம் இத்தகவல்களை எளிதில் பெறலாம். இதில்,
செல்போன் எண் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்
மூலமே, வாகனத்தின் காலாவதி தேதி, கட்டணத் தொகை உள்ளிட்ட விவரங்கள்
அனுப்பப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...