நன்றாகப் படிப்பவர்கள் உட்பட அனைத்து நிலை மாணவர்களும் திருப்தி அடையும் வகையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கிவ்2ஏசியா தொண்டு நிறுவனம் மற்றும் கிராமாலயா ஆகியன சார்பில் ரூ.73 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இன்று வழங்கப்பட்டன. பொருட்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''பிளஸ் 2 தனித் தேர்வர்கள் நட்டாற்றில் விடப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். தனித் தேர்வர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படுமா, இல்லையா என்பது தொடர்பாக ஜூன் 19-ம் தேதி தமிழக முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள், கருத்துகள் வரப் பெறுகின்றன. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் அடிப்படையில், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு நன்றாகப் படிப்பவர்கள் உட்பட அனைத்து நிலை மாணவர்களும் திருப்தி அடையும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை
பள்ளிகள் கல்விக் கட்டணமாக 75 சதவீதத் தொகையை 2 தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதாக இ-மெயில், தொலைபேசி மூலம் நிறைய புகார்கள் வருகின்றன. புகார் கூறப்படும் பள்ளிகள் மீது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கு தொடர்பாக ஜூன் 21-ம் தேதிக்குப் பிறகு தமிழக முதல்வர் எடுக்கும் நடவடிக்கையையொட்டி, பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கப்படும்.''
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), பி.அப்துல் சமது (மணப்பாறை), சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எஸ்.லட்சுமி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா, நகர் நல அலுவலர் (பொறுப்பு) சொ.அமுதா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...